Published:Updated:

வெந்தபுண்ணில் வேல்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘நண்டைச் சுட்டு, நரியைக் காவல் வைத்த கதை’ என்பார்கள். அப்படித்தான், இருக்கிறது அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய பி.ஜே.பி அரசு நிறைவேற்றியிருக்கும் அணைகள் பாதுகாப்பு மசோதா!

‘தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட்டு, அதன் மேற்பார்வையில் நதிநீர் பிரச்னைகள் உள்ளிட்ட அனைத்துக்கும் தீர்வு காணப்படும்’ என்பதுதான் மசோதாவின் மையக்கரு.

எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, பி.ஜே.பி-யின் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வே, ‘மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன’ என்று கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது!

இது நூற்றுக்குநூறு உண்மை என்பதற்கு நூற்றாண்டு உதாரணம்... பொதுப்பணித்துறை.

ஏரி, குளம், ஆறு என நீர்நிலைகள் அனைத்தும் அந்தந்த ஊர் மக்களின் கட்டுப்பாட்டில்தான் ஒருகாலத்தில் இருந்தன. நீர்நிலைகளில் வண்டல்மண் மற்றும் தாவரங்களால் நீர்வழிப்பாதைகள் அடைபடாமல் இருக்க, ஆண்டுதோறும் குடிமராமத்துச் செய்வது உள்ளிட்ட சீரமைப்புப் பணிகளை, அந்தந்த ஊர் மக்களே தங்கள் பொறுப்பில் செய்துவந்தனர். இதன்காரணமாக வறட்சி வந்தாலும் தாக்குப்பிடித்து அவர்களால் பயிர்த்தொழிலை செய்யமுடிந்தது. ஆனால், ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் நீர்நிலைகள் அனைத்தும் பொதுப்பணித்துறை மற்றும் அரசாங்க அமைப்புகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு, சீரழிவு ஆரம்பமானது. உள்ளூர்க்காரர்களின் சிறு ஆக்கிரமிப்புகள் தொடங்கி, அரசாங்கத்தின் பெரும் ஆக்கிரமிப்புகள் வரை எதையும் யாராலும் தட்டிக்கேட்க முடியாத நிலையே இன்று வரை நீடிக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில்தான், ஒட்டுமொத்தமாக இந்தியா முழுக்க இருக்கும் அணைகளின் கட்டுப்பாட்டை, தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ளும் வகையில் அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றி, வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சியிருக்கிறது மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு.

அத்திப்பட்டியில் இருந்த அதிகாரம், சென்னைப்பட்டணத்துக்கு மாற்றப்பட்டதிலேயே நீர்நிலைகளின் பாதி உயிர் போய்விட்டது. இப்போது, டெல்லிப்பட்டணத்துக்கு மொத்த அதிகாரத்தையும் மாற்றி மீதி உயிரையும் பறிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

வாழ்க ஜனநாயகம்...

-ஆசிரியர்

வெந்தபுண்ணில் வேல்!