Published:Updated:

காப்பி அடிக்கப்பட்டதா ஆய்வுக் கட்டுரைகள்..? அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மெளனம்! பின்னணி என்ன?

200-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள், வெளிநாட்டு ஆய்வுக் கட்டுரைகளிலிருந்து அப்பட்டமாகக் காப்பியடிக்கப்பட்டிருப்பதாக சர்வதேச அளவில் புகார் எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வலிமையையும் நம்பகத்தன்மையையும் (Courage and Faith) தனது குறிக்கோளாகக் கொண்டுள்ளது, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முத்திரை. ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம், அதன் நம்பகத்தன்மையைத் தற்போது இழந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் வெளிநாட்டு ஆய்வுக்கட்டுரைகளிலிருந்து அப்பட்டமாகக் காப்பியடிக்கப்பட்டிருப்பதாக சர்வதேச அளவில் எழுந்துள்ள புகாரே இதற்குக் காரணம்.

காப்பியடிக்கப்பட்ட ஆய்வுகளில் ஒன்று
காப்பியடிக்கப்பட்ட ஆய்வுகளில் ஒன்று

அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியல் ஆலோசகர் எலிசபெத் பிக், நுண்ணுயிரியல் முனைவர். இவர், சர்வதேச அளவில் ஆய்வுகளில் நடக்கும் குற்றங்கள், ஆய்வுகளின் நம்பகத்தன்மை குறித்து தொடர்ந்து தனது வலைதளப் பக்கத்தில் பதிவுசெய்துவருகிறார். சமீபத்தில் தனது வலைதளத்தில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் குறித்து ஒரு பதிவு எழுதியிருந்தார்.

அதில், "ராஜா சர் அண்ணாமலை அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இந்த வருடம் தனது 90 வயதைக் கொண்டாடுகிறது. டைம்ஸ் உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலில், 801-வது இடத்தில் இந்தப் பல்கலைக்கழகம் இருக்கிறது. அவர்களது தொலைதூரக் கல்வி இயக்ககம் எண்ணற்ற பல ஆன்லைன் படிப்புகளை அளிக்கிறது. அதிக எண்ணிக்கையிலானோர் அதற்குப் பதிவுசெய்துள்ளனர்.

மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மொழிகள், கடல்சார் படிப்புகள் எனப் பல பிரிவுகள் இந்தப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்தியாவின் பல்கலைக்கழகங்களுக்கான தரச் சான்றிதழ்கள் வழங்கும் நாக் என்னும் கமிட்டியால் இந்தப் பல்கலைக்கழகத்துக்கு, முதல் தரச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த தரச் சான்றிதழைப் பெறுவதற்கான முக்கியமான தகுதி, கல்வி நிறுவனங்கள் வெளியிடும் ஆய்வுக்கட்டுரை எண்ணிக்கைகள். ஆய்வுக்கட்டுரைகள் அதிகம் தர வேண்டும் என்கிற அழுத்தம் இருப்பதாலோ என்னவோ, வேறொருவருடைய ஆய்வுக்கட்டுரையிலிருந்து காப்பியடிக்கும் போக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆய்வுக்கட்டுரைகளில் தெரியவருகிறது.

முதலில், இரண்டு மூன்று ஆய்வுக்கட்டுரைகள் மட்டுமே இப்படி காப்பி அடிக்கப்பட்டிருக்கின்றன என்று நினைத்து இன்னும் ஆழமாக ஆராய்ந்ததில், 200 ஆய்வுக்கட்டுரைகள் வரை இப்படி உண்மைத்தன்மையற்று வேறோர் ஆய்வுக்கட்டுரையிலிருந்து காப்பியடிக்கப்பட்டு நமக்குக் கிடைக்கப்பெறுகின்றன. விலங்குகள் ஆராய்ச்சியில்கூட வேறொரு கட்டுரையிலிருந்து படத்தை எடுத்து தங்களது ஆராய்ச்சியில் உபயோகித்திருக்கிறார்கள். நானோ ஆய்வுகளில், ஒரே வகையான ஆய்வுகளை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார்கள். வரைபடங்களைக்கூட வேறொன்றைப் பார்த்து அதுபோலவே உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

எலிசபெத் பிக்
எலிசபெத் பிக்

மொத்தம் 202 ஆய்வுக்கட்டுரைகளில் தென்படும் இந்தக் குற்றங்கள் அனைத்தையும் அது வெளியிடப்பட்ட நிறுவனங்களுக்கு மெயில் அனுப்பியிருக்கிறேன். அவர்கள், இது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். எனினும், இவை அத்தனையும் நான் தனிப்பட்ட அளவில் கவனித்தவைதானே ஒழிய குற்றம்சாட்டும் நோக்கத்தில் அல்ல" என்று குறிப்பிட்டிருந்தார். (அவரின் பதிவைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்)

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து பல்வேறு தரப்புகளும் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு கேள்வி எழுப்பிவருகின்றன. பல்கலைக்கழகத் துணைவேந்தர் இதுகுறித்து மௌனம் காத்துவருகிறார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

பல்கலைக்கழகத்தில் நிலவிவரும் இந்தப் பிரச்னை தொடர்பாக, பெயர் வெளியிட விரும்பாத பேராசிரியர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், "இங்கே டாப் உயர்கல்வி நிறுவனங்களை டைம்ஸ் ரேங்க்கிங் அடிப்படையிலும், நாக் கமிட்டியின் சான்றிதழின் அடிப்படையிலுமே தேர்ந்தெடுக்கிறார்கள். நாக் கமிட்டியின் சான்றிதழ் பெற வேண்டுமென்றால், பல்கலைக்கழகக் கட்டுமானம் உள்ளிட்ட பல விஷயங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால், எல்லாப் பல்கலைக்கழகங்களிலுமே இந்தக் கட்டுமான வசதிகள் இருக்கின்றன. அதனால் மற்ற பல்கலைக்கழகங்களிலிருந்து தனித்துத் தெரிவதற்கு ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே இவர்களுக்கு ஆயுதம். அதிக எண்ணிக்கையிலான ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பிப்பார்கள். அதன் உண்மைத் தன்மை குறித்து ஆய்வுசெய்ய அல்லது கேள்வி எழுப்ப நாக் கமிட்டியிலும் ஆட்கள் கிடையாது. அதனாலேயே கமிட்டிக்கு அளிக்கப்படும் எண்ணிக்கைகள் எதுவும் ஆய்வு செய்யப்படாமலேயே தரச் சான்றுகளும் வழங்கப்படுகின்றன. இந்த ஆரோக்கியமற்ற போக்கின் விளைவே, இப்படிக் காப்பியடித்து ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிப்பதும்" என்று பகீர் தகவல்களைப் பகிர்கிறார்,

Vikatan

தேசிய கல்விக்கொள்கை வரைவு, ஆய்வுக்கெனத் தனியாகப் பல்கலைக்கழகங்கள் பிரிக்கப்படும், அதற்கான மானியங்களும் அதிகரிக்கப்படும் எனக் குறிப்பிடுகிறது. ஆனால், அதற்கு முன்பு இதுபோன்ற குற்றங்களுக்கு மாநில அரசு தீர்வு காண மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு