நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஆன்லைன் சூதாட்டம் மட்டும்தான் ஆபத்தா..?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

ஆன்லைன் சூதாட்டத்துக்கு சட்டபூர்வமாகத் தடை விதிக்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளது தமிழக அரசு. காலம் கடந்த முடிவுதான். என்றாலும், இப்போதாவது முடிவெடுக்கப்பட்டிருக்கிறதே என்று சந்தோஷப்பட்டுதான் ஆக வேண்டும். அதே நேரம்... ‘பொதுமக்களின் பணத்தைச் சுரண்டும் மோசடி நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு எப்போது முடிவு கட்டப்போகிறது தமிழக அரசாங்கம்?’ என்கிற ஆதங்கக் கேள்வி, தானாகவே எழுகிறது!

கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் மனநிலை கொண்ட நம் மக்கள், அந்தப் பணத்தை சேமித்துப் பெருக்க வேண்டும் என்பதிலும் எப்போதுமே கவனமாக இருப்பவர்கள். இத்தகைய சேமிக்கும் மனப்பாங்கு கொண்டவர்களால்தான், உலக அளவில் பொருளாதாரம் வீழும்போதும், இந்தியப் பொருளாதாரமானது தாக்குப்பிடித்து நிற்கிறது. ஆனால், அத்தகைய நற்குணம் கொண்ட மக்களைக் குறிவைத்து இயங்கும் மோசடி நிறுவனங்களால், சேமிப்பு என்கிற விஷயமே வெகுசீக்கிரம் காணாமல் போய்விடுமோ என்கிற அச்சம், சமீபகாலமாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

‘உங்க பணத்தை எங்ககிட்ட தந்தா, ஆறே மாதத்தில் டபுளா வாங்கிக்கலாம்’, ‘ஒரே ஆண்டில் கோடீஸ்வரனாகலாம்’ என்றெல்லாம் கவர்ச்சிகரமாகப் பேசி, பணத்தை முதலீடு செய்யச் சொல்லும் மோசடி நிறுவனங்கள், ஒரே இரவில் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன, மொத்தப் பணத்துடன்!

‘இவையெல்லாம் காலங்காலமாக நடப்பவைதான்’ என்று அரசாங்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது, நம் பொருளாதாரத்தை மேன்மேலும் பாதிக்கும் என்பதே உண்மை. பத்து ஆண்டுகளுக்குமுன் பி.ஏ.சி.எல் என்ற நிறுவனத்தில் மக்கள் கட்டிய பணம், இன்னும் திரும்பக் கிடைத்தபாடில்லை. மதுரை-எம்.ஆர்.டி.டி, திருச்சி-செந்தூர் ஃபின்கார்ஃப் எனப் பல மோசடி நிறுவனங்கள் சுருட்டிச் சென்ற பணமும் திரும்பியபாடில்லை. அவற்றில் முதலீடு செய்த குடும்பங்கள் பலவற்றின் கதி என்னவென்றே தெரியவில்லை.

வேலூர்-காட்பாடியில் அலுவலகத்தைத் திறந்து, வடமாவட்ட மக்களிடமிருந்து கோடிகோடியாய் நிதியைத் திரட்டிய ஐ.எஃப்.எஸ் நிறுவன முதலாளிகள் மாயமாகி, அவர்கள் இருக்கும் இடம், இன்றுவரை கண்டறியப்படவில்லை. அடுத்து, திண்டுக்கல்-பிரைட்வே, தொழுதூர்-ஜி.எஸ்.டி.எல் எனப் பல நிறுவனங்களும் இந்த வரிசையில் இணையக்கூடும் என்று பேச்சு. இதுபோல, நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் மக்களிடம் பணம் வசூலித்தபடியே உள்ளன. ‘மோசடி நிறுவனங்கள்’ என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்த பிறகும், மக்கள் பணத்தைக் காப்பாற்ற தமிழக அரசு ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? தடை செய்யச் சொல்லி மத்திய அரசாங்கத்தை ஏன் அணுகவில்லை?

தி.மு.க அரசுக்கு மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருக்கிறது எனில், மோசடி நிதித் திட்டங்கள் அனைத்துக்கும் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், ‘மோசடி நிதித் திட்டங்களை பினாமி பெயர்களில் நடத்துவதே ஆளும்கட்சி அரசியல்வாதிகளும், காவல்துறை அதிகாரிகளும்தான்’ என்கிற குற்றச்சாட்டு, நூற்றுக்கு நூறு உண்மை என்றே எடுத்துக்கொள்ளப்படும்!

- ஆசிரியர்