Published:Updated:

எதிர்பார்ப்புகள் நிறைவேறட்டும்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறட்டும்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

எதிர்வரும் 2022-23 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்ரவரி 1-ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார். கொரோனா கொடுமைகள் மூன்றாவது ஆண்டாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் கொடுஞ்சூழலில், பல தரப்பினரும் பற்பல எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கிறார்கள். பலவிதமான வரிச்சலுகைகள் அறிவிக்கப்படும் என்பதுதான் அனைவரின் முக்கியமான எதிர்பார்ப்பு!

‘80சி பிரிவில் செய்யப்படும் செலவு மற்றும் முதலீட்டுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகை 1,50,000 ரூபாயிலிருந்து 2,50,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்; வீட்டுக் கடன் வட்டிக்கு அளிக்கப்படும் வரிச்சலுகை 2,00,000 ரூபாயிலிருந்து 2,50,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்; 80D பிரிவில் குடும்பத்துக்கு எடுக்கப்படும் மருத்துவக் காப்பீடு பிரீமியத்துக்கு அளிக்கப்படும் வரிச்சலுகை 25,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்; விருப்ப சேமநல நிதியில் (VPF) தனியார் நிறுவன ஊழியர்கள் சேமிக்கும் தொகையின் உச்சபட்ச அளவை 5,00,000 ரூபாய் வரை உயர்த்த வேண்டும்; வீட்டிலிருந்து வேலைபார்க்கும் சூழல் உருவாகிவிட்டதால், அதற்கான வசதிகளை அமைத்துக்கொள்ளும் வகையில் 50,000 ரூபாய் வரையிலான செலவுகளுக்கு வரிச்சலுகை தர வேண்டும்...’ - இப்படி நீள்கின்றன மாதச்சம்பளதாரர்களின் எதிர்பார்ப்புகள். அனைத்துமே ஆழ்ந்து பரிசீலிக்கப்பட வேண்டியவையே!

‘தற்போது 5%, 12%, 18%, 28% என நான்கு விதமாக இருக்கும் ஜி.எஸ்.டி வரியை 5%, 10%, 15% என மூன்று வகையாக மாற்ற வேண்டும்; கார்ப்பரேட் நிறுவனங்களைப் போலவே, சிறுதொழில் நிறுவனங்களுக்கும் 25% (தற்போது 30%) வரி விதிக்கப்பட வேண்டும்; தனிநபர் வருமான வரிச்சலுகை வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகள், சிறு, குறுந் தொழில் முனைவோரிடையே பலமாகவே எழுந்துநிற்கின்றன.

‘அதிக அளவில் கடன் கிடைக்க வேண்டும்; உற்பத்தியாகும் பொருள்கள் வீணாகாமல் நீண்ட காலத்துக்குப் பயன்படுத்த குளிர்பதனக் கிடங்கு போன்ற உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க இன்னும் அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும்; விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்ய வேண்டும்; உரிய சந்தைத் தகவல்களை உடனுக்குடன் பெறும்வகையில் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்லாண்டுக்கால எதிர்பார்ப்பில் இந்தத் தடவையும் காத்திருக்கிறார்கள் விவசாயிகள்.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ.1 லட்சம் கோடிக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தார் நிதியமைச்சர். அவற்றின் நிலை இப்போது என்னவென்பது குறித்த விளக்கத்தையும் நிதியமைச்சர் இந்த சமயத்தில் அளிப்பது சிறப்பானதாக இருக்கும்.

ஆக மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற, அனைத்துத் தளங்களிலும் நிதி ஏற்றம் பெற்றாக வேண்டும். அதை நோக்கியதாகவே, பட்ஜெட் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்று நம்புவோம்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism