Published:Updated:

‘‘வாங்கோ, வாங்கோ’’ என்று அழைத்தால் போதுமா?

தலையங்கம்

தலையங்கம்

‘‘வாங்கோ, வாங்கோ’’ என்று அழைத்தால் போதுமா?

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்

‘‘தீவிரமான கோவிட் கட்டுப்பாடுகள், உலக நாடுகள் இடையே சீனாவுக்கு எதிரான சிந்தனையோட்டம் காரணமாக, குறைந்த மதிப்பிலான பொருள்களைத் தயார் செய்யும் ஆர்டர்கள் இந்தியாவை நோக்கி வரத் தொடங்கியுள்ளன. மேலும், உக்ரைன் போர் காரணமாக, ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நடவடிக்கை எடுத்தால், அந்த நாட்டில் இருந்தும் பல தொழில் நிறுவனங்கள் இந்தியாவுக்கு வரும்’’ என்று சொல்லியிருக்கிறார், இந்திய ஏற்றுமதி நிறுவனங் களுக்கான கூட்டமைப்பான ஃபியோ (FIEO) அமைப்பின் தலைவர் ஏ.சக்திவேல்.

அவர் சொல்லியிருக்கும் தகவல் உள்ளபடியே மகிழ்ச்சியைத் தருவதாகவே இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சீனாவில் செயல்பட்டுவந்த தொழில் நிறுவனங்களை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும்; சீனாவுக்குத் தந்து வந்த தயாரிப்பு ஆர்டர்களை வேறு நாடுகளுக்குத் தர வேண்டும் என்றெல்லாம் உலக நாடுகள் யோசித்து வருகின்றன.

உலக நாடுகளின் இந்தச் சிந்தனை மாற்றத்தை உணர்ந்த இந்திய அரசாங்கம், சீனாவில் இருந்துவரும் தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளைத் தந்து வரவேற்று வருகிறது. உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டம் (PLI) வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் நம் நாட்டை நோக்கி வர முக்கியமானதொரு தூண்டுகோலாக இருக்கிறது.

என்றாலும், இந்த நடவடிக்கைகள் நிச்சயம் போதாது என்பதே தொழில் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் பலரின் கருத்தாக இருக்கிறது. காரணம், ஒரு நிறுவனம் சீனாவுக்குப் பதிலாக இன்னொரு நாட்டைத் தேடும்போது, இந்தோனேசியா, வியட்நாம், கம்போடியா, பங்களாதேஷ் எனப் பல நாடுகள் நம்முடன் போட்டி போடுகின்றன. இந்த நாடுகள் நம்மைவிட சிறிதாக இருந்தாலும், வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான பல சலுகைகளைச் செய்துதந்து, உள்ளிழுத்துக்கொண்டு, அந்த நாட்டு மக்களுக்கு புதிய வேலைவாய்ப்பைத் தந்து வருகின்றன. பங்களாதேஷின் தனிநபர் வருமானம், நம் நாட்டின் தனிநபர் வருமானத்தைவிட அதிகரிக்கக் காரணம், ஏற்றுமதியில் அந்த நாடு காட்டிய அக்கறைதான்.

ஆனால், வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களை வரவேற்பதில் நமது மத்திய, மாநில அரசாங்கங்கள் ஒன்றிணைந்து செயல்படவில்லை. தவிர, மாநிலங்களும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் கடுமையாகப் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

‘‘ஹனுமானுக்கு அதன் சக்தி தெரியாத மாதிரி, நம் சக்தி நமக்குத் தெரியவில்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் துணிந்து முதலீடு செய்யும்போது, நம் நாட்டு நிறுவனங்களோ தயங்கி நிற்பது ஏன்?’’ என்று கேட்டிருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அமைச்சர் கேட்டதில் தவறில்லை. ஆனால், வெளிநாட்டு நிறுவனங்களை, ‘‘வாங்கோ, வாங்கோ’’ என்று அழைத்து எந்தப் புண்ணியமும் இல்லை; வருகிறவர்களை எப்படி கவனிக்கப்போகிறோம் என்பதுதான் முக்கியம். இதற்கான திட்டத்தை முதலில் மத்திய, மாநில அரசுகள் உருவாக்கட்டும். அதன்பிறகு வெளிநாட்டு நிறுவனங்கள் தானாக வரும்!

- ஆசிரியர்