பிரீமியம் ஸ்டோரி

முதல்முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்கவிருக்கிறார் தி.மு.க-வின் தலைவர் மு.க.ஸ்டாலின். கடந்த காலங்களில் மேயர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், துணை முதலமைச்சர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்திருப்பதன் மூலம், பலவிதமான அனுபவங்களையும் பெற்றிருப்பவர் என்பதால், தற்போது கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழகத்தை மேலும் மேலும் முன்னேற்றுவதற்கான முயற்சிகளை கையில் எடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு! என்றாலும், மிக மிக அவசரமாகக் கையில் எடுக்க வேண்டியது, கொரோனாவால் நிலைகுலைந்து போய்க்கொண்டிருக்கும் தமிழகத்தைக் கட்டிக் காப்பாற்றும் பணியைத்தான்!

சுகாதாரப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் அதே நேரம், கொரோனா காரணமாக நிலைகுலைந்து போயிருக்கும் கல்வி, தொழில், வணிகம், விவசாயம் என்று கடந்த ஓராண்டுக் காலத்தில் பலவிதமான குழப்பங்களுடன் சிக்கித் தவிக்கும் அனைத்துத் துறைகளிலும் முக்கியமாகக் கவனத்தைப் பதிக்க வேண்டும் என்பதையும் மறந்துவிடக் கூடாது. குறிப்பாக, கல்வி, விவசாயம், தொழில்துறை, வணிகம் ஆகியவை அவசர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். கடந்த ஓராண்டாகத் தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன. பல்வேறு தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டுவிட, பலவும் மூச்சுத் திணறிக்கொண்டுள்ளன. விவசாயிகள் பாடுபட்டு வளர்த்த தானியங்கள், காய்கறிகள் எனப் பலவிதமான உணவுப் பொருள்களெல்லாம் விற்பதற்கும் பாதுகாக்கவும் பதப்படுத்தவும் உரிய வழிகளின்றி வீணாகிக் கொண்டிருக்கின்றன.

‘வரும் முன் காவாதான் வாழ்க்கை’ என்று அய்யன் திருவள்ளுவர் சொன்னது போல... கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சமயத்திலேயே உயிராதார விஷயங்களான விவசாயம், தொழில், வணிகம் மற்றும் கல்வி ஆகியவற்றின் மீது முழு கவனத்தைச் செலுத்தியிருக்க வேண்டும். துறை சார்ந்த நிபுணர் குழுக்களை உருவாக்கி, உறுதியான நடவடிக்கைளை உடனுக்குடன் எடுத்திருக்க வேண்டும். உதாரணமாக, ஆன்லைன் கல்வி என்பதற்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்து, கடந்த ஆண்டின் இறுதியிலேயே அமல்படுத்த ஆரம்பித்திருந்தால், கல்வியின் நிலை இந்த ஆண்டும் பரிதாப நிலைக்குச் சென்றிருக்காது.

ஏற்கெனவே, 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் இருக்கும் சூழலில், மேலும் கடன்கார மாநிலமாக மாறிவிடுமோ என்கிற அச்சம் எங்கெங்கும் பரவிக் கிடக்கிறது. நிதிநிலையும் இனி மேம்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

ஆகக்கூடி... சவால், மேலும் சவால், மேலும் மேலும் சவால் என்பதுதான் இன்றைய நிதர்சனம். உரியவகையில் சமாளித்து அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தினால்... ஐந்து ஆண்டுகள் என்ன, அடுத்தடுத்த ஐந்து ஆண்டுகளிலும்கூட ஆட்சி செலுத்த மக்கள் அனுமதிப்பார்கள்.

ஸ்டாலின் தயாரா?

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு