Published:Updated:

2K Kids: ஒரு பள்ளி, ஓர் ஆசிரியர்... நிகழ்ந்த அற்புதங்கள்!

 சசிக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
சசிக்குமார்

- நிவேதிதா புகழேந்தி

பாசிபடிந்த சுவர்கள், தூசி அப்பிய பெஞ்சுகள், குறைந்துகொண்டே வந்த மாணவர் எண்ணிக்கை என ஒரு காலத்தில் இருந்தது புதுச்சேரி, கூனிச்சம்பட்டில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் அரசு தொடக்கப் பள்ளி. ஆசிரியர் ஒருவரின் முயற்சியால், கற்பித்தல் முதல் கட்டடம் வரை அங்கு மாற்றங்கள், முன்னேற்றங்கள் கடகடவென நிகழ்ந்தன. இன்று அங்கு 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். இந்தப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் போட்டிபோடுகிறார்கள். அனைத்துக்கும் காரணமான அந்த ஆசிரியர் பற்றியும், அவர் அங்கு செய்த மறுமலர்ச்சி பற்றியும்தான் இந்தக் கட்டுரை.

உன் எதிர்காலம், என் பொறுப்பு!

இளம் ஆசிரியர் சசிக்குமார், பாவேந்தர் பாரதிதாசன் அரசு தொடக்கப் பள்ளியில் 2007-ம் ஆண்டு சேர்ந்தபோது, கூடுதல் பொறுப்பு தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். ஏழை மாணவர்களின் எதிர்காலப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஆசிரியர், அதற்காகப் பல நேர்மறை முயற்சிகளை மேற்கொண்டார். பள்ளியின் சேர்க்கையை அதிகரிக்க, பெற்றோர்களை ஈர்க்க, பள்ளியின் கட்டமைப்பை உயர்த்த நினைத்தார். சுவர்களைச் சுத்தம் செய்து, வண்ணம் பூசினார். நிதி பற்றாக்குறை ஏற்பட்டபோது தன் சொந்த சேமிப்பையும் பயன்படுத்த அவர் தயங்கவில்லை. சசிக்குமாரின் ஆர்வத்தைக் கண்ட ஊர் மக்களும் பள்ளியின் தூய்மைப் பணியில் ஈடுபட ஆரம்பித்தனர்.

பள்ளிக் கட்டடம்... கற்றலுக்கான கருவி!

மாணவர்கள் காட்சிகளால் கற்க ஆர்வம் காட்டுபவர்கள் என்பதால், பள்ளி சுற்றுச்சுவர், வகுப்பறைச் சுவர்கள், படிக்கட்டுகள் என்று அனைத்து இடங்களிலும் கற்றல் தொடர்பான விளக்கப்படங்களால் அலங்கரித்து, மாணவர் கள் பள்ளிக்குள் நுழையவே ஆசைப்படும் ஒரு சூழலை உருவாக்கினார். கலை ஆர்வமுள்ள பல ஆசிரியர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சசிக்குமாருடன் கைகோத்து, விடுமுறை நாள்களில் எல்லாம் பள்ளியை வண்ணமயமாக்கும் வேலைகளைச் செய்தனர். அடுத்ததாக, வகுப்பறைகளை மேம்படுத்தப் பட்ட வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட் கிளாஸ் ஆக மாற்றும் முயற்சிகளை எடுத்தார். சிறு சிறு பொருள்களைப் பயன்படுத்தி பாடத்தை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் நடத்தினார். மாணவர்களிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தைக் கொண்டு வர வண்ண வண்ண அட்டைகளும் புகைப்படங்களும் கொண்ட புத்தகங்களால் ஆன நூலகம் உரு வாக்கப்பட்டது. மாணவர்கள் அங்கு படித் ததை, அரங்க மேடையில் ஏறி கதைகளாகச் சொல்ல உற்சாகப்படுத்தினார் சசிக்குமார்.

மகிழ்ச்சித் திருவிழா!

கலைத் திறமைகளை மாணவர்கள் கற்றுக்கொள்ளவும், அவர்களின் ஆளுமை மேம்படவும் பள்ளியில் ‘குழந்தைகள் மகிழ்ச்சித் திருவிழா’ நடத்தப்பட்டது. அந்த மேடை அனுபவங்கள் மாணவர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்தன. அதன் விளைவாக, அப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற கலை மற்றும் அறிவியில் போட்டிகளில் வெற்றிகளைக் குவிக்க ஆரம்பித்தனர். இப்படி அறிவு வளர்ச்சி ஒரு பக்கம் என்றால், ஸ்கவுட் கேம்ப்கள் மூலம் ஒழுக்கத்தையும் கற்பித்தார். சசிக்குமாரின் கடின முயற்சியால், பள்ளிக்கு அருகில் இருந்த அரசு நிலம் விளையாட்டு அரங்காக மாற்றப்பட்டது. மேலும், பல்நோக்கு அரங்கம், சமையலறை சீரமைப்பு என அவரது அனைத்து முயற்சிகளும் வெற்றிபெற பல ஆசிரியர்கள் கைகொடுத்தனர்.

பெற்றோருக்கும் விழிப்புணர்வு!

மாணவர் நலத்தோடு, அந்தக் கிராமப்புற பெற்றோருக்கும் கழிப்பறை விழிப்புணர்வு வழங்கினார் சசிக்குமார். கழிப்பறையின் முக்கியத்துவம் பற்றியும் அதைப் பயன் படுத்தும் முறை பற்றியும் அவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த முயற்சியால் ஊக்குவிக்கப்பட்டு தங்களது வீடுகளில் கழிப்பறை கட்டிய பெற்றோரும் உண்டு.

2K Kids: ஒரு பள்ளி, ஓர் ஆசிரியர்... நிகழ்ந்த அற்புதங்கள்!

நம்பர் ஒன் பள்ளி... நல்லாசிரியர் விருது!

மத்திய அரசு நடத்தும் பள்ளிகளுக்கு இடையேயான சுகாதார, துப்புரவுப் போட்டிகளில் 2017, 2018, 2019 என மூன்று வருடங்கள் பாவேந்தர் பாரதிதாசன் அரசு தொடக்கப் பள்ளி, நாட்டிலேயே தூய்மையான பள்ளி என முதல் இடம் பெற்றது குறிப்பிடத் தக்கது. மேலும், ‘தூய்மையான இந்தியாவுக்கான யோசனைகள்’ என்ற போட்டியில், ‘மேம் படுத்தப்பட்ட கழிப்பறை துப்புரவு கிட்’ என்ற சசிக்குமாரின் கண்டுபிடிப்புக்கும் தேசிய அளவில் முதல் இடம் கிடைத்தது. சசிக் குமாரின் அர்ப்பணிப்பான ஆசிரியர் பணிக் கான அங்கீகாரமாக, 2019-ம் ஆண்டு ஜனாதிபதியிடம் இருந்து ‘தேசிய நல்லாசிரியர் விருது’ பெற்றார்.

இப்போது, இந்தப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளுக்கு இடம் கிடைக்க, பக்கத்து ஊர் மக்கள் ஏங்குகின்றனர். இடப்பற்றாக் குறையால், இப்போதைக்கு பள்ளி அமைந்துள்ள கூனிச்சம்பட்டி கிராமத்துக் குழந்தைகளுக்கு மட்டுமே இடம் வழங்க இயல்கிறது. ‘கிராமப்புற மாணவங்க சார், இவங்க பழக்கத்தை எல்லாம் மாத்த முடியாது. ஆரம்பப் பள்ளிக்கு இவ்வளவு அமர்க்களம் தேவையா..?’ என்று முன்னர் கூறியவர்கள் எல்லாம், இன்று இப்பள்ளி மாணவர்களின் திறன்களையும் ஒழுக்கத்தையும், நன்னடத்தை யையும் கண்டு ஆச்சர்யப்படுகிறார்கள்.

சசிக்குமாரை போல இன்னும் பல ஆசிரியர் கள் உருவானால், கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றம் சிறப்பாக அமையுமே என்ற விருப்பம் ஏக்கமாகப் படர்கிறது!