Published:Updated:

சரியான மருந்தைத் தாருங்கள் நிதி அமைச்சரே!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

சரியான மருந்தைத் தாருங்கள் நிதி அமைச்சரே!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

கொரோனாவால் பாதிப்படைந்துள்ள தொழில்துறைக்கு உதவி செய்வதற்காக 6.25 லட்சம் கோடி ரூபாய்க்கான பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.60,000 கோடி உத்தரவாதக் கடன்; அவசரகால உத்தரவாதக் கடனாக 1.25 லட்சம் கோடி; சுகாதாரத்துறை நிறுவனங்கள் உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கிக்கொள்ள ரூ.50,000 கோடி உத்தரவாதக் கடன் என நிதி அமைச்சர் அறிவித்திருக்கும் அறிவிப்புகள் அருமையாகத்தான் இருக்கின்றன.

எனினும், கொரோனாவால் சீர்குலைந்து போயிருக்கும் நமது பொருளாதாரம் இந்த அறிவிப்புகளால் மீண்டும் சீரடைந்து வேகம்காணத் தொடங்கிவிடுமா என்று கேட்டால், சந்தேகமாகத்தான் இருக்கிறது. காரணம், முதல் அலையிலும் இரண்டாம் அலையிலும் பாதிப்புக்கு உள்ளான நிறுவனங்களுக்கு மத்திய அரசாங்கம் இரண்டு மாதங்களுக்கு முன்பே உதவிக்கரம் நீட்டியிருக்க வேண்டும். காலம் கடந்து இப்போது செய்யப்படும் கடன் உதவி எவ்வளவு தூரம் பயன்படுமோ தெரியாது. மேலும், பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கை பல லட்சங்களிலும், அந்த நிறுவனங்களுக்குத் தேவைப்படும் கடன் உதவி பல கோடி ரூபாய்களிலும் இருக்கும்போது, மத்திய அரசாங்கம் இப்போது ஒதுக்கியிருக்கும் தொகை போதுமானதாக இருக்குமா என்பது சந்தேகம்தான். தவிர, இந்தக் கடன்களை எந்தளவுக்குத் தருமோ, தெரியாது. இந்தக் கடன்களுக்கு அரசின் உத்தரவாதம் உண்டு என்பதால், வங்கிகள் ஓரளவுக்குத் தர வாய்ப்புண்டு என்று எதிர்பார்க்கலாமே தவிர, அமைச்சர் அறிவித்த அளவுக்கு கடன் உதவி தரப்படுமா என்பதும் கேள்விக்குறியே.

பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவருவதற்காக மத்திய அரசாங்கம் அறிவிக்கும் திட்டங்கள் அனைத்துமே, கைப்பிடி அரிசியைத் தந்துவிட்டு, கைநிறைய அரிசியை அள்ளித் தந்துவிட்டோம் என்று மெச்சிக்கொள்வதுபோல இருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.21 லட்சம் கோடிக்கு பல சலுகைகள் அறிவித்தபோதும் இந்த எண்ணமே பலருக்கும் வந்தது; இப்போதும் வருகிறது. இது பா.ஜ.க-வுக்கும் நல்லதல்ல; நம் நாட்டின் பொருளாதாரத்துக்கும் நல்லது அல்ல.

வயிற்று வலியில் துடிக்கும் நோயாளியின் வயிற்றில் என்ன பிரச்னை, அவருக்கு வேண்டியது மருந்து, மாத்திரை மட்டுமா அல்லது அறுவைசிகிச்சையா என்பதை எல்லாம் ஆராய்ந்தறிந்து, அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்காமல், ‘இப்போதைக்கு என்னால் கொடுக்க முடிந்த மருந்து இதுதான். இப்போது இதைச் சாப்பிடு. பிறகு, உனக்கு நல்ல மருந்து தருகிறேன்’ என்று சொல்வது எப்படிச் சரியாகும்?

கொரோனாவிலிருந்து தப்பிக்க மக்களுக்கு சரியான மருந்து தருவது எந்தளவுக்கு முக்கியமோ, பொருளாதாரமும் பல்வேறு பாதிப்புகளிலிருந்து மீண்டு வர சரியான மருந்தை போதுமான அளவு தருவதும் முக்கியம். அதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்களே தவிர, தற்காலிக நிவாரணம் தரும் தூக்க மாத்திரைகள் அல்ல என்பதை மத்திய அரசு உணரட்டும்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism