பிரீமியம் ஸ்டோரி

கோட்டக் மஹிந்திரா வங்கியின் துணைத் தலைவரான உதய் கோட்டக், இந்தியத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான சி.ஐ.ஐ-யின் தலைவராகவும் இருந்தவர். அந்த அனுபவத்தோடு முக்கியமானதொரு வேண்டுகோளை மத்திய அரசுக்கு வைத்திருக்கிறார் உதய். ‘‘கஷ்டப்படும் மக்களுக்கு நேரடியாகப் பண உதவியும், கஷ்டத்தில் இருக்கும் சிறுதொழில் நிறுவனங்களுக்குக் கடன் வசதியும் மத்திய அரசாங்கம் தர வேண்டும்’’ என்று சொல்லியிருக்கிறார். பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியும் இதே கோரிக்கையை வைத்திருக்கிறார்.

இந்த இருவருமே மிகச் சரியான கோரிக்கையை மிகச் சரியான நேரத்தில்தான் வைத்திருக்கிறார்கள். கொரோனா இரண்டாம் அலையால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பாதிப்பு மிக அதிகம் என பிரதமர் மோடியே வருத்தப்பட்டிருக்கிறார். நம் நாட்டின் பெரும்பான்மை மாநிலங்களில் தீவிரமாக இருக்கும் ஊரடங்கு நடவடிக்கைகளால் எல்லாவிதமான தொழில்களும் முடங்கியுள்ளன. சிறுதொழில் நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களும் அன்றாடம் வெளியே சென்று வேலை செய்து சம்பாதிப்பவர்களும் தற்போது விவரிக்க முடியாத துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். பல கோடி பேர் வேலையை இழந்துள்ளனர்.

இவர்களுக்கு உயிர் காக்கும் மருந்தையும் சிகிச்சையையும் தருவது மிகமிக முக்கியம். அதேபோல, அவர்கள் உயிர் பிழைத்து வாழத் தேவையான பணத்தைத் தருவதும் மிகமிக முக்கியமே! மக்களுக்குத் தேவையான உணவு தானியங்களை மத்திய, மாநில அரசாங்கங்கள் தருகிறதே, திரும்பவும் பணம் எதற்கு என்கிற கேள்வி தேவை இல்லாதது. உணவு தானியங்களைத் தாண்டி, அவசியமான செலவுகளைச் செய்ய முடியாத நிலையில்தான் மக்கள் இருக்கிறார்கள். தமிழக அரசாங்கம் தன் மக்களுக்கு ரூ.4,000 நேரடிப் பண உதவி தந்தாலும், ஊரடங்கு முடிகிற வரை நிலைமையைச் சமாளிக்க இந்த உதவி நிச்சயம் போதாது. தவிர, பிற மாநிலங்களில் இருக்கும் சாதாரண மக்கள் என்ன செய்வார்கள்? கொரோனா கோரதாண்டவம் ஆடும் இந்த நேரத்தில் கடன் கேட்டு எங்கு போவார்கள்?

நேரடியாக அளிக்கப்படும் இந்தப் பண உதவி எல்லோருக்கும் தரத் தேவையில்லை. அன்றாடம் உழைத்தால் மட்டுமே வயிற்றுப்பசியைப் போக்க முடியும் என்கிற விளிம்புநிலையில் வாழ்கிற மக்களுக்கு மட்டும் தந்தால்போதும். அதேபோல, அடுத்தகட்டத்தை நோக்கி நகரவே முடியாது என்கிற நிலையில், ஸ்தம்பித்து நிற்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கும் மட்டும் கடன் தந்தால் போதும். கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையில் ரூ.21 லட்சம் கோடிக்கு உதவி என மத்திய அரசாங்கம் பெரிதாக ஒரு கணக்கு காட்டினாலும், சாதாரண மக்களுக்கு எந்த நன்மையும் விளையவில்லை. இந்த நிலையில், கஷ்டப்படும் மக்களுக்கு உதவுகிற மாதிரி இப்போதாவது நடவடிக்கை எடுக்கலாமே!

அமெரிக்காவும் கனடாவும், ஐரோப்பிய நாடுகளும் ஜப்பானும் கடந்த ஆண்டிலேயே தங்கள் மக்களுக்கு நேரடியாகப் பண உதவி செய்து காப்பாற்றியது. அப்போது செய்யத் தவறிய காரியத்தை மத்திய அரசாங்கம் இப்போதும் செய்யாவிட்டால், மக்களின் பழிச்சொல்லுக்கே ஆளாகும்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு