பிரீமியம் ஸ்டோரி

கோவிட்-19 இரண்டாவது அலை இந்தியாவையே சீர்குலைத்து வரும் இந்த நிலையில், ‘‘கோவிட்-19-க்கான தடுப்பூசிக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்க வேண்டாம்’’ என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. பஞ்சாப், சத்தீஸ்கர் மாநில முதல்வர்களும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மேற்கு வங்க முதல்வரின் இந்தக் கோரிக்கைக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘கோவிட் தடுப்பூசிக்கு ஜி.எஸ்.டி வரி நீக்கப்பட்டால், அதன் விலை உயர்ந்துவிடும்’’ என்று சொல்லியிருக்கிறார்.

கடந்த மே 1-ம் தேதி வந்த தகவல்படி, ரூ.1.45 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வரியாக வசூலாகி இருக்கிறது. இப்படி, கடந்த ஆறு மாதங்களாக ரூ.1 லட்சம் கோடிக்குமேல் மாதம்தோறும் ஜி.எஸ்.டி வரி கிடைத்து வருகிற நிலையில், கோவிட் தடுப்பூசிக்கு ஜி.எஸ்.டி வரியை முற்றிலும் நீக்குவதால் அரசுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுவிடாது.

கொரோனா தடுப்பூசிக்கான செலவுகளை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்கின்றன. தடுப்பூசிக்கான விலையை மத்திய அரசுக்கு ஒரு மாதிரியும், மாநில அரசுக்கு ஒரு மாதிரியும் தடுப்பூசி நிறுவனங்கள் நிர்ணயித்துள்ளன. இந்த அடிப்படையில் ஒரு சின்ன கணக்குப் போட்டுப் பார்ப்போம். அதாவது, 18 வயதுக்கு மேல் இருக்கும் 90 கோடி மக்களில் 30 கோடி பேருக்கு இருமுறை இலவசத் தடுப்பூசி வைக்கும் செலவை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், அதற்கு ரூ.9,000 கோடி (ஒருமுறை தடுப்பூசி ரூ.150 என்கிற கணக்கில்) செலவாகும். இதற்கு 5% ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு செலுத்தினால் அதற்கு ஏற்படும் வரி இழப்பு ரூ.450 கோடி மட்டுமே.

மீதமுள்ள 60 கோடி பேருக்கு இருமுறை இலவசத் தடுப்பூசி வைப்பதற்கான செலவை மாநில அரசாங்கங்கள் ஏற்றுக்கொண்டால் ரூ.42,000 கோடி (ஒருமுறை தடுப்பூசி ரூ.350 என்கிற கணக்கில்) செலவாகும். இதற்கு 5% ஜி.எஸ்.டி வரியை மாநில அரசாங்கங்கள் செலுத்தினால், அவற்றுக்கு ஏற்படும் வரி இழப்பு ரூ.2,100 கோடி. இந்த இரு ஜி.எஸ்.டி-யையும் சேர்த்தால் ரூ.2,550 கோடி மட்டுமே. ஒவ்வோர் ஆண்டு பட்ஜெட்டின்போதும் மருத்துவத் துறைக்கு பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கும் மத்திய அரசாங்கம், இந்த ரூ.2,550 கோடியைச் செலவழிக்க ஏன் இவ்வளவு யோசிக்கிறது?

‘மத்திய அரசு கடந்த ஆறு மாதங்களாக ஜி.எஸ்.டி கூட்டத்தை நடத்தாமலே இருப்பது சட்டத்தை மீறிய செயல்’ எனப் பல மாநிலங்களும் விமர்சித்துவரும் நிலையில், மக்கள் உயிரைக் காக்கும் மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி வரியை விதித்து வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறது. ‘கோவிட் தொடர்பான மருந்துப் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி இல்லை’ என்கிற அறிவிப்பை உடனடியாக வெளியிடுவது நாட்டுக்கு மட்டுமல்ல, நாட்டை ஆளும் பி.ஜே.பி அரசுக்கும் நல்லது. மக்கள் மீதுள்ள அக்கறையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில்தான் மத்திய அரசு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு