பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

பாலங்களைக் கட்டிமுடிப்பதில் ஏன் இந்த தாமதம்?

தலையங்கம்
News
தலையங்கம்

தலையங்கம்

ஒரு நாட்டின் பொருளாதாரம் வேகமான வளர்ச்சி காண வேண்டும் எனில், அந்த நாட்டில் கட்டுமான வசதிகள் நன்றாக இருக்க வேண்டும். இன்றைக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் மிகப் பெரிய வளர்ச்சி கண்டிருப்பதற்குக் காரணம், அந்த நாடுகளில் அடிப்படைக் கட்டுமான வசதிகள் அனைத்தும் அனைத்து மக்களுக்கும் அபரிமிதமாகக் கிடைப்பதுதான்!

நம் நாட்டில் கட்டுமான வசதிகள் அதிகரிக்கத் தேவையான திட்டங்கள் ஒருபக்கம் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வந்தாலும், இந்தத் திட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் முடிக்கப்படாமலே இருப்பது பெரும் குறையாக உள்ளது. இதனால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காததுடன், மத்திய அரசாங்கத்துக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் ரூ.93,951 கோடி செலவில் கட்டுமானத் திட்டங்களைத் தொடங்கியது மத்திய அரசாங்கம். ஆனால், பல்வேறு பிரச்னைகள் காரணமாக இன்றுவரை 116 திட்டங்கள் உரிய காலத்தில் முடிக்கப்படாமலே உள்ளன. இதனால் ரூ.20,312 கோடி கூடுதலாக செலவு செய்ய வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, இந்த 116 திட்டங்களையும் நிறுத்திவிடலாமா என மத்திய அரசாங்கம் யோசிக்கத் தொடங்கியிருக்கிறது.

இதில் நாம் கவலைப்பட வேண்டிய முக்கியமான விஷயம், முடிக்கப்படாமலே இருக்கும் கட்டுமானத் திட்டங்களில் 14 திட்டங்கள் நம் தமிழ்நாட்டில் இருப்பதுதான்! பீகாரில் 13 திட்டங்கள் உரிய காலத்தில் முடிக்கப்படாமல் உள்ளன. மகாராஷ்டிரா, தெலங்கானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒற்றை இலக்கத்தில்தான் முடிக்கப்படாத திட்டங்கள் உள்ளன.

சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் பாலம் கட்டும் பணி பகுதி அளவில் முடிந்து, இன்னொரு பகுதியில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதே போல, மதுரையிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுவரும் பாலத்தின் வேலை இதுவரை முடிந்தபாடில்லை. கோவையில் ஏர்போர்ட்டுக்குச் செல்லும் பாதையிலும் பாலம் கட்டப்படும் வேலை மெதுவாக நடந்துவருவதால், அந்தப் பாதையில் போக்குவரத்து நெரிசல் சமாளிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது.

கட்டுமானத் திட்டங்களை அமைப்பதில் மத்திய - மாநிலங்களின் அரசுகள் ‘ஈகோ’ பார்க்காமல் இணக்கமாக நடப்பது அவசியம். காரணம், இந்தத் திட்டங்கள் சரியான காலத்தில் முடிக்கப்பட்டு செயல்பட ஆரம்பித்தால், மக்களுக்கு நிறைய நன்மை கிடைக்கும். இதனால் மாநில அரசின் வருமானம் பெருகும். இது நாட்டின் பொருளாதாரத்தை வேகமாக வளர்க்க உதவும்.

என்ன செய்தால் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தலாம் என எல்லோரும் கடுமையாக யோசித்துவரும் இந்த வேளையில், கட்டுமானப் பணிகளை உரிய காலத்தில் செய்து முடிப்பதன்மூலம் பல ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்துவதுடன், நமது பொருளாதாரத்தையும் மிகப் பெரிய அளவில் வளர்க்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கலாமே!

- ஆசிரியர்