
தமிழ் இலக்கியத்துக்கும் விகடனுக்குமான உறவு, மிக ஆழமானது; அழகானது. ஒரு நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் இவ்வுறவின் மீதான நம்பிக்கையும் அது தருகின்ற ஊக்கமும்தாம்,
விகடன் தன் சிறகுகளை இத்தனை தளங்களில் விரித்துப் பறக்கக் காரணம். இது என்றென்றும் தொடரும் பந்தம்!
இலக்கியத் தளத்துக்கென விகடன் சமைத்த தனித்துவமான பாதை ‘விகடன் தடம்’. புதியவர்களை ஊக்கப்படுத்தி, சாதித்தவர்களைப் பெருமைப்படுத்தி, பரீட்சார்த்த முயற்சிகளை வழிநடத்தி, நவீனத் தமிழ் இலக்கியத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் அழுத்தமான தடத்தைப் பதித்துவருகிறது ‘விகடன் தடம்’.

காலத்தின் இயல்பு, மாற்றங்களைக் கோருவது; புதிய வெளிகளை நாடுவது. அந்த வகையில், இன்றைய உலகத்தை நம்முடன் மேலும் நெருக்கமாக்கியிருக்கிறது மின்னணுப் புரட்சி. ஊடகத்தின் பல பரிமாணங்களையும் இன்னும் உணர்வுபூர்வமாக நம்மை உணர வைத்துக்கொண்டிருக்கிறது இணையப் புரட்சி. ஆம், அச்சு வடிவம் மட்டுமே ஊடகம் என்றிருந்தது மாறி... சமூக ஊடகம், காட்சி ஊடகம் என்று பல்வேறு வாசல்கள் திறக்கப்பட்டுவிட்டன. ஒவ்வொரு நொடியிலும் நாம் இணைந்திருப்பதற்கும், அந்தந்த நொடியே நாம் விவாதிப்பதற்கும் நிறைய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இத்தகைய சூழலில், ‘விகடன் தடம்‘ அச்சுப்பிரதி மட்டும் இந்த இதழோடு விடைபெறுகிறது. அதேசமயம், விகடன் குழுமத்தின் பிற இதழ்கள், விகடனின் இணையதளம், விகடனின் சமூக ஊடகங்கள், விகடன் வெப் டி.வி, நேரடியான நிகழ்ச்சிகள் எனப் பல வழிகளிலும் என்றும்போல் தனது இலக்கியப் பணியை ‘விகடன் தடம்’ சிறப்பாகத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும்.
இந்தச் சீரிய முன்னெடுப்பை வலுப்படுத்த எந்நாளும் எங்களோடு கரம்கோத்திருக்கும் வாசகர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், விளம்பரதாரர்கள், முகவர்கள் அனைவருக்கும் விகடனின் நெஞ்சார்ந்த நன்றிகள். இந்தப் பிணைப்பு என்றும் தொடரட்டும். தமிழால் இணைந்திருப்போம், என்றென்றும் இணையவெளியில்!
- ஆசிரியர்
குறிப்பு: அச்சுப் பிரதியைப் (பிரின்ட் காப்பி) பெற சந்தா செலுத்தியிருக்கும் வாசகர்கள் விரும்பினால், விகடன் குழுமத்திலிருந்து வெளியாகும் பிற இதழ்களுக்கோ, விகடன் இணையதளத்துக்கோ தங்களின் சந்தாவை மாற்றிக்கொள்ளலாம். பணத்தைத் திரும்பப் பெற விரும்பினால், மீதித்தொகை விரைவில் அனுப்பிவைக்கப்படும். இதுதொடர்பாகச் சந்தாதாரர்களுக்குத் தனியாகக் கடிதம் அனுப்பிவைக்கப்படும்.
தொடர்புக்கு,
இமெயில்: refund@vikatan.com .
தொலைபேசி: 044 6607 6407 044 6680 8080