Published:Updated:

வளர்ச்சி குறித்த விஷயத்தில் ‘ஈகோ’ வேண்டாமே!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

மது பொருளாதாரம் குறித்து பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ்வான செய்திகள் தினம்தினம் வெளியாவதைக் கண்டு நம் நாட்டின் சாதாரண மக்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள். கடந்த ஜூலை மாதத்தில் தொழிற்சாலை உற்பத்திக் குறியீடு (IIP) முன்னேற்றம் கண்டிருப்பதாக வெளியான புள்ளிவிவரத்தைப் பார்த்து, இனியாவது முன்னேற்றம் தொடரும் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்க, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நமது ஏற்றுமதியானது 6% அளவுக்குக் குறைந்துள்ளதாகவும் இதனால் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்திருக்க வாய்ப்புள்ளதாகவும் வெளியான செய்தி நம் மகிழ்ச்சியைச் சிதறடிக்கச் செய்திருக்கிறது.

வளர்ச்சி குறித்த விஷயத்தில் ‘ஈகோ’ வேண்டாமே!

இது போதாதென்று சர்வதேச நிதியமான ஐ.எம்.எஃப் நமது பொருளாதார வளர்ச்சி குறித்து இன்னொரு அதிர்ச்சிப் புள்ளிவிவரத்தையும் வெளியிட்டிருக் கிறது. ‘எதிர்பார்த்தைவிட மிக மோசமான வளர்ச்சியை இந்தியப் பொருளாதாரம் கொண்டிருப்பதாக’ ஐ.எம்.எஃப் சொல்லியிருப்பதுடன், நமது ஜி.டி.பி வளர்ச்சி 2019-ல் 7 சதவிகிதமாகவும் 2020-ல் 7.2 சதவிகிதமாகவும் இருக்கும் என்றும் எச்சரித்திருக்கிறது.

இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் பிரதமர் மோடியின் அரசாங்கம் 100 நாள்களில் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டுவரும் இந்தச் சமயத்தில்தான், இப்படி எதிரும்புதிருமாகப் புள்ளிவிவரங்களும் கருத்துகளும் வந்துகொண்டிருக்கின்றன. கார் விற்பனை குறைந்ததற்கு ஓலா, ஊபர் நிறுவனங்களே காரணம் என்கிறார் நிதி அமைச்சர். அது முக்கியமான காரணமில்லை என்கின்றன கார் தயாரிக்கும் நிறுவனங்கள். சில ஆண்டுகளுக்கு முன், சற்றும் யோசிக்காமல் கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கமும் வேகவேகமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி.யுமே பொருளாதார மந்தநிலைக்குக் காரணம் என்கிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.

இப்படி ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்வது, நமது பொருளாதாரம் குறித்து சாதாரண மனிதனின் நம்பிக்கையைக் குலைப்பதாகவே இருக்கிறது. நமது பொருளாதாரத்துக்கு உண்மையில் என்னதான் பிரச்னை, எங்கே தவறு நடந்தது, இந்தத் தவற்றினைத் திருத்திக்கொள்ள எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதைக் குறித்து மத்திய அரசாங்கம் உடனடியாக ஆராய்ந்து, இதிலிருந்து வெளிவரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்க வேண்டும். இதற்கு, விருப்புவெறுப்பில்லாமல் பொருளாதாரத்தை அலசி ஆராய்பவர்களின் கருத்தை மத்திய அரசாங்கம் வெளிப்படையாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி என்பது நாட்டு மக்களின் நல்வாழ்வு தொடர்பான பிரச்னை என்பதால், இந்த விஷயத்தில் ‘ஈகோ’ பார்க்காமல், எல்லா நிபுணர் களிடமும் கருத்துக்கேட்டு, தகுந்த நடவடிக்கைகளை எடுப்பது மத்திய அரசின் கடமை. பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவராமல்போனால், ஆட்சிக்கு வரும் வாய்ப்பையே இழக்கவேண்டியிருக்கும்!

- ஆசிரியர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz