Published:Updated:

பெருமைப்படும் காலம் இன்னும் வந்துவிடவில்லை!

ஹலோ வாசகர்களே..!

பிரீமியம் ஸ்டோரி
2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்வதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. இந்த நிலையில், இந்தியப் பொருளாதாரம் ஆச்சர்யப்படும் வகையில் வளர்ச்சி கண்டுவிட்டது எனச் சில பொருளாதார அறிஞர்கள் கருத்துகளை வெளியிடத் தொடங்கிவிட்டனர். கோவிட் சூழலில் 2020-21 முதல் காலாண்டில் மைனஸ் 25% என்ற ஆபத்தான நிலை வரை வீழ்ந்த ஜி.டி.பி, பின்னர் மெல்ல தலைதூக்க ஆரம்பித்து இரண்டாம் காலாண்டில் மைனஸ் 7 சதவிகிதமாக இருந்தது, ஓரளவு நம்பிக்கையைக் கொடுத்து வருகிறது. மேலும், நிதிப் பற்றாக்குறை, வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைவாக வைத்திருப்பது எனப் பலவற்றிலும் மோடி - நிர்மலா சீதாராமன் கூட்டணியில் வியக்கத்தக்க வளர்ச்சி கண்டுள்ளதாக ஆளும்கட்சிக்கு ஆதாரவாகப் பேசும் பொருளாதார நிபுணர்கள் சொல்லி வருகின்றனர்.

இதில் ஓரளவு உண்மை உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. அதேசமயம், நமது பொருளதார வளர்ச்சி குறித்து வெவ்வேறு வகைகளில் வெளியாகும் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, ஆளும்கட்சிக்கு அனுசரணையாகப் பேசும் பொருளாதாரப் புள்ளிகள், மிகவும் அவசரம் காட்டுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. 

உதாரணமாக, 2021-22-ம் நிதி ஆண்டில் நமது பொருளாதார வளர்ச்சி மைனஸ் 7.7 சதவிகிதமாக இருக்கும் எனக் கடந்த வியாழன் அன்று மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட முன்கூட்டிய கணிப்பு (Advance estimate) கட்டாயம் கவனிக்கத்தக்கது. 1980-களில் நமது பொருளாதார வளர்ச்சி மைனஸ் 5.24% என்ற அளவுக்குச் சரிந்தது. இதுதான் சுதந்திர இந்தியாவில் மிகக் குறைவான வளர்ச்சி என்று சொல்லப்படும் நிலையில், எதிர்வரும் நிதி ஆண்டில் நம் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 7.7% அளவுக்குக் குறையும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது. தவிர, பி.எம்.ஐ (PMI) என்று சொல்லப்படும் ‘பர்சேஸ் மேனேஜர் இண்டெக்ஸும்’ கடந்த டிசம்பரில் குறையவே செய்துள்ளது. கடந்த நவம்பரில் 53.7-ஆக இருந்த பி.எம்.ஐ, கடந்த டிசம்பரில் 52.3 புள்ளிகளாகக் குறைந்திருக்கிறது. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதும் கணிசமாகக் குறைந்திருக்கிறது. 

நம் பொருளாதார வளர்ச்சியானது சேவைத் துறையையே 50 சதவிகிதத்துக்குமேல் நம்பியிருக்கிறது. கோவிட்-19 நோய் தடுக்கும் மருந்துகள் இன்னும் அதிகமான மக்களை விரைவில் சென்றடைந்து, அவர்கள் பயமின்றி வெளியே வருவதன்மூலமே சேவைத்துறை வேகமான வளர்ச்சி காணத் தொடங்கும். இதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி, மக்களின் வருமானம் அதிகரிக்கத் தொடங்கும். 

மத்திய அரசாங்கம் தெரிந்தோ, தெரியாமலோ எடுத்த சில நடவடிக்கைகள் நமது பொருளாதார வளர்ச்சியின் சரிவைத் தடுத்து, மீண்டும் மேலே கொண்டுவர உதவியிருந்தாலும், இன்னும் அதிகமான நடவடிக்கைகளை சரியாக எடுப்பதன் மூலம் மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட முன்கூட்டிய கணிப்பை மாற்றியமைக்க முடியும். நம் பொருளாதார வளர்ச்சி குறித்து நாம் மார்தட்டி பெருமைப்படும் காலம் இன்னும் வந்துவிடவில்லை என்பதை மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் அறிந்துகொள்வது அவசியம்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு