Published:Updated:

நமக்குள்ளே...

இயந்திரத்தன்மை மிகுந்த இன்றைய வாழ்க்கைமுறையில் மன அழுத்தத்தைக் குறைக்கவும் விளையாட்டு மிக அவசியம்.

பிரீமியம் ஸ்டோரி

ந்த ஆண்டின் பத்ம விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலில் ஒன்பது விளையாட்டு வீராங்கனைகள் இடம்பெற்றிருக்கிறார்கள். பொதுவாக ஆண்களே நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளுக்கு அதிக அளவில் பரிந்துரைக்கப்படுவது வழக்கம். இசை, கலை, அரசியல் போன்ற துறைகளில் முத்திரை பதித்த பெண்களுக்குத்தான் இந்தப் பட்டியலில் ஓரளவு இடம் கிடைக்கும். முதன்முறையாக இந்த ஆண்டு விளையாட்டுத்துறைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோமின் பெயர் பத்மவிபூஷண் விருதுக்கும், இறகுப்பந்து வீராங்கனை பி.வி.சிந்துவின் பெயர் பத்மபூஷண் விருதுக்கும், வினேஷ் ஃபொகாட் (மல்யுத்தம்), ராணி ராம்பால் (ஹாக்கி), ஹர்மன்பிரீத் கௌர் (கிரிக்கெட்), சுமா சிரூர் (துப்பாக்கி சுடுதல்), மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்), டஷி மற்றும் நங்ஷி மாலிக் (எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் பெண் இரட்டையர்) ஆகியோரின் பெயர்கள் பத்மஸ்ரீ விருதுக்கும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பின்னணியில் தமிழகத்துக்கு வருவோம். இங்கு பெரும்பாலும் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை. `ஸ்போர்ட்ஸ் எல்லாம் நமக்கு எதுக்கு? படிச்சு உருப்படுற வழியைப் பாரு’ என்பதுதான் பல வீடுகளில் பெண்களுக்கு வழங்கப்படும் ‘அறிவுரை’. பெண்களுக்குப் பயிற்சி தரும் வகையில் பெண் பயிற்சியாளர்கள் இங்கு அதிகம் இல்லை என்கிற சூழல் ஒருபக்கம். விளையாட்டால் படிப்பு பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் என்கிற தவறான எண்ணம் இன்னொருபக்கம்.

உண்மையில் மாநில அளவில், தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும், பரிசுகள் வெல்லும் வீராங்கனைகளுக்கு அரசுத்துறைப் பணிகளில் தனி கோட்டாவே உண்டு. விளையாட்டில் ஈர்ப்புள்ள பெண் குழந்தைகளை, சிறுவயதிலேயே அடையாளம் கண்டுகொண்டு சரியான வழியில் செலுத்த இங்கு போதிய அளவு பயிற்சியாளர்களோ, வழிகாட்டிகளோ இல்லை என்பது நம் துரதிர்ஷ்டம்.

வீர விளையாட்டுகளான ஏறு தழுவுதல், ஜல்லிக்கட்டு, கபடி என்று கலக்கிக்கொண்டிருந்த நம் இளைஞர்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் இன்று ஆன்லைன் விளையாட்டுகளின் மோகத்தில் மைதானம் பக்கமே செல்லாமல் இருக்கிறார்கள். நகர்ப்புறப் பள்ளிகள் ஏசி வசதி செய்து தருவதில் காட்டும் அக்கறையை விளையாட்டு மைதானங்கள் அமைப்பதில் காட்டுவதில்லை. இடப்பற்றாக்குறையும் ஒரு காரணம். ஒவ்வொரு பள்ளிக்கும் விளையாட்டு மைதானம் அவசியம் எனச் சட்டத்திருத்தம் கொண்டுவந்து, அதைத் தீவிரமாகச் செயல்படுத்தாத வரையிலும் நகரத்துக் குழந்தைகளின் ஆரோக்கியமும் வெற்றிவாய்ப்பும் கேள்விக்குறியே. விளையாட்டை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல் அதையும் மக்கள் நல்வாழ்வின் அங்கமாகக் கருதி, சீரிய முயற்சிகள் எடுத்தால் மட்டுமே தமிழக விளையாட்டுத்துறை சில நட்சத்திரங்களைக் காண முடியும்.

வெற்றியைக் கொண்டாடவும், தோல்வியைக் கடந்து செல்லவும் நமக்குக் கற்பிப்பது விளையாட்டுதானே? இயந்திரத்தன்மை மிகுந்த இன்றைய வாழ்க்கைமுறையில் மன அழுத்தத்தைக் குறைக்கவும் விளையாட்டு மிக அவசியம். ஆகவே, படிப்பைப் போலவே விளையாட்டுகளுக்கும் ஆதரவளித்து, வாழ்க்கையின் சகல சவால்களையும் தைரியமாகச் சந்திக்கும் செல்லங்களாக நம் குழந்தைகளை வளர்க்கலாம்தானே!

நமக்குள்ளே...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு