Published:Updated:

இன்றைய நமது முதல் தேவை, முதலீடுதான்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

டப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு முடிவுக்கு வரப்போகிறது. முதல் காலாண்டில் நாம் கண்ட ஜி.டி.பி வளர்ச்சிகூட இரண்டாம் காலாண்டில் இருக்குமா என்கிற சந்தேகம் ஒருபக்கமிருக்க, பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தத் தேவையான முயற்சிகளை மத்திய அரசாங்கம் செய்துகொண்டுதான் இருக்கிறது.

இப்போது நம் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தநிலை மறைந்து, மீண்டும் பொருளாதார வளர்ச்சி பெருகவேண்டுமெனில் புதிய தொழில் தொடங்குவதற்கான முதலீடு நமக்கு அபரிமிதமாகக் கிடைக்க வேண்டும். ‘‘கடந்த 2008-ம் ஆண்டு நமது ஜி.டி.பி-யில் 40 சதவிகிதமாக இருந்த தொழில் முதலீடு, 2018-ல் 29 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது’’ என்கிற அதிர்ச்சிப் புள்ளிவிவரத்தைச் சொல்லியிருக்கும் நமது முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், ‘‘வருகிற 2024-ம் ஆண்டுக்குள் நமது பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலர் மதிப்புமிக்க பொருளாதாரமாக மாறவேண்டுமெனில், பெரிய அளவில் முதலீடு பெருகுவது அவசியம்’’ என்று சொல்லியிருப்பதையும் நாம் கவனிக்கத் தவறக் கூடாது.

அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்குச் சென்று, அங்கு வசிக்கும் இந்தியர்களையும் அமெரிக்க நிறுவனங்களையும் இந்தியாவில் முதலீடு செய்யவேண்டும் என அழைப்புவிடுத்திருப்பது பாராட்டத்தக்கது. இந்தப் பயணத்தின்மூலம் நமக்குக் கிடைக்கப்போகும் தொழில் முதலீடு குறித்த துல்லியமான தகவல்கள் இதுவரை இல்லை என்றாலும், புதிய முதலீட்டைக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கையைப் பிரதமர் மோடி சரியாகவே எடுத்திருக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

புதிய தொழில் முதலீட்டைக் கொண்டுவரும் முயற்சிகள் ஒருபக்கமிருக்க, தொழில் முதலீடு நம் நாட்டை நோக்கி ஏன் வரமறுக்கிறது என்பது குறித்து மத்திய அரசாங்கம் ஆழமாக ஆராயவேண்டும். சேவைத்துறையில்

முதலீடுகள் ஓரளவுக்கு நம் நாட்டை நோக்கிவந்தாலும், உற்பத்தித்துறையில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வந்தால் மட்டுமே பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்.

நமது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியைக் குறைத்ததன் நோக்கமே, மிச்சமாகும் வரிப் பணம் மீண்டும் முதலீடு செய்யப்படும் என்கிற எதிர்பார்ப்பால்தான். தொழில் வரியைக் குறைத்தபின்னும் தொழில் முதலீடு குறைவாக இருந்தால், அதற்கான காரணம்தான் என்ன என்று மத்திய அரசாங்கம் கட்டாயம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

இந்த விஷயத்தில் மத்திய அரசாங்கம் எடுத்தேன், கவிழ்த்தேன் என ஏதேதோ செய்யாமல், பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான சரியான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் எடுப்பது அவசியம்!

- ஆசிரியர்