22 தங்கப் பெண்கள்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே

சூழல் என்றாலும் கலங்கத் தேவையில்லை, உங்களுடன் சேர்ந்து எதிர்நீச்சலிட்டுக் கரையைத்தொட அவள் துணையிருப்பாள் என்று உறுதி கூறுகிறோம்.

22...

‘ஏஞ்சல் எண்’, ‘தன்னம்பிக்கை தரும் எண்’ என்று உலகின் பலநாடுகளில் நம்பப்படும் எண். பழங்கால நாகரிகங்கள் தொட்டே நம்பிக்கைக்குரிய எண்.

ஆங்கிலத்தில் ‘கேட்ச் -22’ என்றொரு சொற்றொடர் உண்டு. தப்பிக்க இயலாமல் சுழலுக்குள் மாட்டிக்கொள்வதுபோல அமையும் சிக்கலான சந்தர்ப்பத்தை, ‘கேட்ச் 22’ என்று சொல்வார்கள். ஜோசஃப் ஹெல்லர் எழுதி 1961-ம் ஆண்டு வெளிவந்த ‘கேட்ச் 22’ என்ற நாவலில் முதன்முதலாக இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியப் படைப்பான இந்தப் புனைவு நாவலில், ‘பிரச்னைக்குத் தீர்வே பிரச்னைதான்’ என்கிற கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது.

‘வியட்நாம் நாட்டின் மீது அமெரிக்கா போர்தொடுத்தபோது, அமெரிக்க இளைஞர்கள் தம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர். அதற்குக் காரணமே இந்த நாவல்தான்’ என்பது வரலாறு. கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு கட்டாய ராணுவப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு, வியட்நாம் சென்ற ஒவ்வொரு அமெரிக்க இளைஞனும் கையில் ‘கேட்ச்-22’ நாவலோடுதான் விமானம் ஏறினான். வியட்நாம் போரில் மோசமாகத் தோற்றது அமெரிக்கா... அமைதி திரும்பியது!

பார்வைக் குறைபாடுள்ளவர், மூக்குக்கண்ணாடியைத் தொலைத்தால் தேடி எடுக்கமுடியாமல் எப்படி நிலைகுலைந்து நிற்பாரோ, அதுபோன்றதொரு நிலைதான் கேட்ச் 22. நம்மில் எத்தனையோ பேர் இதுபோன்ற சூழலில் மாட்டித் தவித்திருப்போம். ‘மீளவே முடியாத புதைகுழி’ என்று எண்ணிக் குழம்பியிருப்போம். அதையெல்லாம் இப்போது நினைத்துப்பார்த்தால், ‘அப்பாடா... எப்படியோ தப்பினோம்’ என்று வரும் நிம்மதிப் பெருமூச்சு... அடடா!

அந்த வகையில் பெண்களுக்கு ஒரு வரம் உண்டு. எத்தகைய ஊழி வெள்ளத்திலும் எதிர்நீச்சலடித்து, கரையைத் தொடும் தன்னம்பிக்கை என்கிற பெரும் வரத்தைப் பெண்ணுக்குள் பூட்டிவைத்திருக்கிறது இயற்கை. அதேபோலத்தான் உங்களின் அன்பான `அவள்.’ 22-வது ஆண்டாக மழையிலும் வெயிலிலும் உங்களுடன் உறவாடியே மகிழ்கிறாள். ‘வாசகிகளின் பெஸ்ட் ஃபிரெண்ட்’ என்கிற அடையாளத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறாள். இதற்கான முழுமுதற்காரணம், அன்பு வாசகிகளாகிய நீங்கள்தாம். உங்களின் ஆதரவும் அன்பும் எப்போதும்போல இனியும் எங்களைக் கொண்டுசெலுத்தும் என்று நம்புகிறோம்.

இந்த இதழ் 22-ம் ஆண்டு சிறப்பிதழாக உங்கள் கைகளில் தவழ்கிறது. இதைத் தொடர்ந்து வரும் இதழ்களிலும் பயனுள்ள பளிச் பகுதிகளோடு, வாசகிகள் பங்களிப்பையும் புதுமையான பல வழிமுறைகளில் அதிகப்படுத்த இருக்கிறோம். அடுத்தடுத்து வெளிவரவிருக்கும் இதழ்கள் உங்கள் மனத்தை மேன்மேலும் கவரும் என்பதில் ஐயமில்லை. ‘கேட்ச் 22’ சூழல் என்றாலும் கலங்கத் தேவையில்லை, உங்களுடன் சேர்ந்து எதிர்நீச்சலிட்டுக் கரையைத்தொட அவள் துணையிருப்பாள் என்று உறுதி கூறுகிறோம்.

வளர்வோம்... இணைந்தே!

நமக்குள்ளே...