Published:Updated:

கிரிப்டோகரன்சிக்குத் தடை விதிப்பது சரியா?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

இந்திய நிறுவனங்களோ, தனிப்பட்ட நபர்களோ எல்லா வகையான கிரிப்டோ கரன்சிகளைத் (Cryptocurrency) தடை விதிக்கும் மசோதாவை மத்திய அரசாங்கம் நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத் தொடரில் கொண்டுவரப் போவதாகச் செய்தி வெளியாகியிருப்பது உள்ளபடியே வரவேற்கத்தக்க ஒன்றாக இருக்கிறது.

இன்றைக்கு நம்நாட்டு இளைஞர்களும் குறுகியகாலத்தில் பெரும் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களும் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகள் மீது கவனம் செலுத்தக் காரணம், கடந்த சில ஆண்டுகளில் அது தந்த அபரிமிதமான லாபம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2016 ஜனவரி 1-ம் தேதி பிட்காயின் விலை ரூ.28,820. இப்போது அதன் விலை சுமார் ரூ.33.45 லட்சம். இதன் விலை இன்னும் அதிகரித்தாலும் ஆச்சர்யமில்லை என்கிறார்கள் சிலர். மேலும், டெஸ்லா நிறுவனத்தின் அதிபர் எலான் மாஸ்க், சில நாள்களுக்கு முன்பு 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பிட்காயின்களை வாங்கினார். இதனால் சர்வதேச சந்தையில் பிட்காயினுக்கு புதிய அங்கீகாரமும் மவுசும் உருவாகி, அதன் விலை கடந்த ஒரு வாரத்தில் 10,000 டாலர் உயர்ந்துள்ளது.

அளவுக்கதிகமான லாபம், எலான் மாஸ்க் வாங்கிய செய்தியைப் பார்த்து நம்மவர்களும் கிரிப்டோகரன்சியில் பணம் போட நினைப்பது சரியல்ல. ஐந்து ஆண்டுகளில் பிட்காயினின் விலை ஆயிரங்களிலிருந்து லட்சங்களாக உயர்ந்திருக்கலாம். ஆனால், 2017-ல் சுமார் ரூ.12 லட்சத்துக்கு விலை போன பிட்காயின் ஓராண்டில் ரூ.2.50 லட்சமாகக் குறைந்ததைக் கவனிக்கத் தவறக் கூடாது. அன்றைக்கு ஆசை ஆசையாய் அதில் பணம் போட்டவர்கள், பிற்பாடு பெருமளவு நஷ்டப்பட்டு வெளியேறியதை நாம் மறக்கக் கூடாது. தவிர, எலான் மாஸ்க் எவ்வளவு இழப்பை வேண்டுமானாலும் தாங்குவார். நாம் தாங்குவோமா?

மத்திய அரசின் இந்த முடிவால் ஏற்கெனவே தாறுமாறாக உயர்ந்துவரும் பிட்காயினில் மக்கள் பணத்தைப் போட்டு இழப்பதை நிச்சயம் தவிர்க்க முடியும். ஏற்கெனவே வெளிநாடுகளில் புழக்கத்தில் இருக்கும் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளை ஒழித்துக் கட்டிவிட்டு, நம் நாட்டுக்கு ஏற்ற மாதிரியான கிரிப்டோகரன்சியை நம்மால் உருவாக்க இப்போது வழி பிறந்திருக்கிறது. ஏற்கெனவே இருக்கும் கிரிப்டோகரன்சிகள் மீது நம் அரசாங்கத்துக்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் இல்லை. இதனால் இந்த நவீன ஆன்லைன் கரன்சியைப் பயன்படுத்தி தீவிரவாதிகளுக்குப் பணம் அனுப்புவது, ஹவாலா முறையில் பணத்தை வெளிநாட்டுக்கு அனுப்புவது எனப் பல வகையான முறைகேடுகளும் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

தவிர, பிட்காயின் என்கிற பெயரில் நம் நாட்டில் இப்போது பல மோசடிகளும் நடக்க ஆரம்பித்துவிட்டன. இதனால் அப்பாவிகள் பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகிறார்கள். ஒரு நாட்டு மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைப் பாதுகாத்துத் தர வேண்டியது அரசின் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்ற மத்திய அரசாங்கம் முன்வந்திருப்பதற்கு நாம் நிச்சயமாகப் பாராட்டலாம்.

- ஆசிரியர்