Published:Updated:

கடன் கழுத்தை நெரிக்க, இலவசம் தேவையா?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

விரைவில் நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்து, ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதற்காகத் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் வாக்குறுதிகளை அள்ளி விடத் தொடங்கியுள்ளன. குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை தரப்படும் எனத் தி.மு.க-வும், மாதம்தோறும் ரூ.1,500-ம், ஆறு காஸ் சிலிண்டரும் இலவசமாகத் தரப்படும் என அ.தி.மு.க.வும் அறிவித்துள்ளன.

இந்த வாக்குறுதிகளைக் கொஞ்சம் உன்னிப்பாகக் கவனித்தால், பல கேள்விகள் எழுகின்றன. முதலில், குடும்பத் தலைவிகளைக் கணக்கிடுவதிலேயே குழப்பம் வந்துவிடுகிறது. தமிழகம் முழுக்க சுமார் இரண்டு கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. ஒரு ரேஷன் கார்டுக்கு ஒரு குடும்பத் தலைவி என்று கணக்கிடப்படுமா, ஒரே குடும்பத்தில் இரண்டு, மூன்று குடும்பத் தலைவிகள் (ஒரு மாமியார், இரு மருமகள்) இருந்தால், அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாகத் தரப்படுமா?

ஒரு ரேஷன் கார்டுக்கு ஒரு குடும்பத் தலைவி என்றே கணக்கிட்டால்கூட, அ.தி.மு.க அளித்துள்ள வாக்குறுதியை (6 காஸ் சிலிண்டர்) ஐந்து ஆண்டு காலத்துக்கு நிறைவேற்ற சுமார் ரூ.46,000 கோடி, குடும்பத்துக்கு மாதம்தோறும் ரூ.1,500 ஐந்து ஆண்டுகளுக்குத் தர சுமார் ரூ.1.66 லட்சம் கோடி என ரூ.2 லட்சம் கோடிக்குமேல் செலவாகும். தி.மு.க அளித்துள்ள வாக்குறுதியை (மாதம்தோறும் ரூ.1,000) ஐந்து ஆண்டு காலத்துக்கு நிறைவேற்ற சுமார் ரூ.1 லட்சம் கோடிக்குமேல் செலவாகும். இத்தனை லட்சம் கோடி ரூபாய் செலவுக்கான வருமானத்தை எப்படிப் பெறப்போகின்றன என்பது குறித்து இரு கட்சிகளும் வாயைத் திறக்கவில்லை.

தமிழக அரசாங்கத்துக்கு ஏற்கெனவே ரூ.4.85 லட்சம் கோடி கடன் உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இது ரூ.5.70 லட்சம் கோடியாக உயரும் நிலை உள்ளது. இந்தக் கடனைத் திரும்ப கட்டவே ஆண்டுதோறும் சுமார் ரூ.30,000 கோடி வட்டி கட்டி வருகிறோம். இந்த நிலையில், இன்னும் ஒன்று அல்லது இரண்டு லட்சம் கோடி ரூபாயை செலவு செய்ய நினைப்பது எப்படி சரியாகும்?

தவிர, ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம்தோறும் ரூ.1,000 அல்லது ரூ.1,500 உதவித் தொகையும், ஆண்டுக்கு ஆறு காஸ் சிலிண்டர் தர வேண்டிய அவசியம் என்ன? தமிழகம் முழுக்க இன்றும் பல லட்சம் குடும்பங்கள் வறுமையில் வாடித் தவிக்கின்றன. அப்படிப்பட்ட ஏழைகளைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு இந்த உதவிகளைச் செய்யப்போவதாக அறிவித்தால், அதை யார்தான் தவறு என்று சொல்ல முடியும்? அப்படிச் செய்யாமல், எல்லோருக்கும் இலவசமாகத் தருவோம் என்று அறிவிப்பது ஓட்டுகளைப் பெறத்தானே? மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் சரியான திட்டங்களை அறிவிப்பதை விட்டுவிட்டு, இலவசங்களை அறிவித்து, வாக்குகளைப் பெற நினைப்பதை அரசியல் கட்சிகள் எப்போது நிறுத்தப்போகின்றன?

இந்த விஷயத்தில் எது சரி, எது தவறு என்று சிந்தித்துப் பார்த்து செயல்பட வேண்டியது மக்கள்தாம்! மக்கள் சிந்தித்து செயல்படுவார்களா?

- ஆசிரியர்