Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே

யாருமற்ற அத்தைக்கு வாங்கித் தந்த அன்புப்பரிசு; உறவுகளை இழந்து தனிமரமாக வாழும் பக்கத்துவீட்டுத் தாத்தாவுடன் பத்து நிமிடங்கள் பேசியதால் துளித்த கண்ணீர்...

ப்படி இருந்தது தீபாவளி?

ஒவ்வொருவருக்கும் சொல்ல ஓராயிரம் கதைகள் உண்டு. ஒரு மாதம் முன்பே எந்தக் கடையில் என்ன உடை வாங்கலாம்... அந்த வருடம் லேட்டஸ்ட் என்ன என்பதில் தொடங்கி மேட்ச்சாக வளையலும் கம்மலும் கழுத்தணியும் தேடித்தேடி வாங்கி அடுக்கிக்கொள்வதே அலாதி சுகம்தான்.

தீபாவளிக்கு முந்தைய இரவு, மருதாணியிடத் தொடங்கி, கதைகள் பேசி, தாழ்வாரத்தில் நிலவு பார்த்து உறங்குவதும், தலையணை உறையிலும் படுக்கைவிரிப்பிலும் உதிர்ந்துகிடக்கும் காய்ந்த மருதாணித் துகள்களை யார் கூட்டுவது என்ற பஞ்சாயத்துடன்தான் விடியும் தீபாவளி!

அடுக்களையில் சுழியமும் வடையும் சுடும் வாசனை வீடெங்கும் பரவ, அத்தை மகள், சித்தி மகன், பெரியம்மா மகள், மாமன் மகன் என்று பட்டாளமாகப் புத்தாடையில் வீட்டைச் சுற்றிச்சுற்றி கையில் வடை, முறுக்குடன் எவ்வளவோ ஓடியிருப்போம்! கைகொள்ளாத வெடிகளுடன் தெருவில் இறங்கி யாருக்கு எந்த வெடி என்கிற பாகப்பிரிவினையில் நிறையவே முட்டியிருப்போம்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கூடியிருக்கும் அத்தனை உறவுகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் ஒரு `மெட்ராஸ்கார அத்தை’, ஒரு `பாம்பேக்கார சித்தி’ என்று யாராவது ஒருவரும் இடம்பெறத் தவறமாட்டார். யாருக்காகவோ கூடத்தில் கத்திக்கொண்டிருக்கும் டி.வி-யைத் தாண்டி மாமா, சித்தப்பா, பெரியப்பாவின் வெடிச்சிரிப்புகள் அவ்வப்போது கேட்பதுண்டு. பாட்டி, யாருக்கும் தெரியாமல் ரகசியமாகக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே அடுக்களையில் காபி போடுவதும் உண்டு.

தீபாவளி... வெறும் திருவிழா அல்ல. அது, உறவுகளின் நட்பாடல், நட்புகளின் உறவாடல், உணர்வுகளின் சங்கமம்! தொலைக்காட்சிகளும், அலைபேசிகளும் ஆக்கிரமிக்க ஆரம்பித்த பிறகு, மாநகரங்களும் நகரங்களும் இந்த உறவுச்சங்கிலியிலிருந்து முதலில் விடுபட ஆரம்பித்தன. தற்போது குக்கிராமங்களும்கூட தத்தமது கூடுகளில் அடங்கி, முடங்க ஆரம்பித்துவிட்டன. `உறவுகளின் சங்கமம்’ என்பது வெறும் சம்பிரதாயப் புன்னகையாக மட்டுமே மாறிக்கிடக்கிறது.

இதற்கு நடுவேயும் பெருநகரங்களிலிருந்து கூட்டம்கூட்டமாக பண்டிகைக் காலங்களில் சொந்த ஊர் நோக்கிப் பறந்துசெல்பவர்களைப் பார்க்கும்போது பரவசம் பற்றிக்கொள்ளவே செய்கிறது. உறவுகளின் சங்கமத்தை உயிர்ப்போடு பிடித்துக்கொண்டிருப்பவர்கள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள் என்கிற பெருமிதம் நெஞ்சில் பரவுகிறது.

உங்களுக்கும் பரவுகிறதுதானே! சரி, உறவுகளுடனான கலந்துரையாடல்; அதன் மூலமாகக் கிடைத்த புதிய உற்சாகம்; யாருமற்ற அத்தைக்கு வாங்கித் தந்த அன்புப்பரிசு; உறவுகளை இழந்து தனிமரமாக வாழும் பக்கத்துவீட்டுத் தாத்தாவுடன் பத்து நிமிடங்கள் பேசியதால் துளித்த கண்ணீர்... இப்படி எத்தனையோ அனுபவங்கள் இந்த தீபாவளியில் உங்களுக்குக் கிடைத்திருக்கும்தானே... அவற்றையெல்லாம் `அவள் விகடன்’ தோழிகளுடன் கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலமாகப் பகிருங்களேன்!

நமக்குள்ளே...