தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே

அமைப்புசாரா பெண் தொழிலாளர்கள் குழந்தைகளைக் கண்காணிக்க அரசு ஏதேனும் முயற்சிகள் எடுக்கப்போகிறதா?

ண்ணுக்கு அடியில் மீளாத்துயில் கொண்டுவிட்டான் சுஜித் வில்சன். மணப்பாறை, நடுக்காட்டுப்பட்டியின் ஆழ்துளைக் கிணற்றுக்குள் நடந்த சுஜித்தின் மரணம், ஒட்டுமொத்தமாக மக்களின் மனசாட்சியைத் தொட்டுப் பார்த்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் இன்னுமொரு சோகம்... `சுஜித்துக்கு என்ன ஆயிற்று?’ என்று தொலைக்காட்சி வாயிலாக நேரலையில் பார்த்துப் பதைத்துக்கொண்டிருந்த பெற்றோர், தங்கள் மகள் சஞ்சனா தண்ணீர்த்தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்ததை அறியாமல் இருந்தது.

சுஜித் மற்றும் சஞ்சனாவின் மரணங்கள் துரதிர்ஷ்டவசமானவை என்றாலும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை என்பதில் ஐயமில்லை. திறந்திருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை மூடும் முயற்சியை அரசு மீண்டும் கையில் எடுத்திருக்கிறது. ஆனால், இது மட்டும் போதுமா? குழந்தைகளின் பாதுகாப்பு அரசின் கைகளில் மட்டுமா? நம் வீட்டில் அமைத்த ஆழ்துளைக் கிணற்றினால் பயனில்லை எனில், சில ஆயிரங்கள் செலவு செய்து அதை மூடிவிடுவது நம் கடமை இல்லையா?

கிராமப்புறங்களில் குழந்தைப் பராமரிப்பு என்பது ஆணும் பெண்ணும் ஆளுக்கொரு பக்கமாக வேலை செய்யும் சூழலில் சிரமம்தான். நகரங்களில் உள்ளதைப்போல ‘டே கேர் சென்டர்’ வசதியோ, வாய்ப்போ இல்லாத பெண்களின் நிலை என்ன? குடும்பச் சூழல், பணி செய்யத் துரத்துகையில் குழந்தைகளைப் பேணிப் பாதுகாப்பது எப்படி? அமைப்பு சாராத பெண் பணியாளர்கள் பாடு திண்டாட்டம்தான். ஆனால், இந்தப் பெண்கள், தினம் ஒருவர் என்று சுற்றுமுறையில் அங்கு பணி செய்பவர்களின் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள முயல வேண்டும். இதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் உண்டுதான். ஆனால், குழந்தையைப் பாதுகாப்பாக வளர்க்கவேண்டிய முதல் பொறுப்பு பெற்றவர்களுக்குத்தானே?

குழந்தைகள் காப்பகங்கள் இல்லாத காலத்தில் வயல்வெளிகளில் மரத்தடித் தூளிகளில் தூங்கியெழுந்த ஒரு சமூகம், இப்படித் தண்ணீர்த்தொட்டிகளுக்கும் ஆழ்துளைக் கிணறுகளுக்கும் குழந்தைகளைப் பறிகொடுப்பது ஏன் என்று சிந்திப்போம். பணத்தைத் தேடுவதற்காக பந்தங்களைப் பறிகொடுத்ததும், அதனாலேயே கவனச்சிதறலில் சிக்கிக்கொண்டதும்தான் முக்கிய காரணங்கள். ஒரு சமூகமாகவே குழந்தை வளர்ப்பில் நாம் தவறிக்கொண்டிருக்கிறோம்.

அமைப்புசாரா பெண் தொழிலாளர்கள் குழந்தைகளைக் கண்காணிக்க அரசு ஏதேனும் முயற்சிகள் எடுக்கப்போகிறதா? அதுவரை நாமே பொறுப்புடன் சில முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ளப்போகிறோமா? இந்த விஷயத்தில் அரசைக் குறைகூறுவதோடு நின்றுவிடப் போகிறோமா? அல்லது, நம் கடமை உணர்ந்து குழந்தைகளைப் பாதுகாக்கப்போகிறோமா?

நமக்குள்ளே
நமக்குள்ளே