Published:Updated:

தொழில் வளர்ச்சியில் தமிழகம் மேலும் சிறக்கட்டும்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

வியக்க வைத்துக்கொண்டிருக்கிறது தமிழக அரசாங்கம். கொரோனா நோய்த் தொற்றால் உலக அளவில் தொழில்களெல்லாம் முடங்கிக்கிடக்கும் இந்த நேரத்தில், மிக அதிகமான தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே `நம்பர் ஒன்’ மாநிலமாக நம் தமிழக அரசாங்கம் இருப்பதைப் பார்த்து நாம் எல்லோருமே பெருமைகொள்ளலாம். தொற்றுநோய் மும்முரமாக இருக்கும் இன்றைய நிலையில், உலகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்களுடனும், இந்தியாவின் பிற மாநிலங்களிலுள்ள தொழிலதிபர்களுடனும் பேசி, தமிழகத்தில் தொழில் தொடங்கும் எண்ணத்தை அவர்களிடம் ஏற்படுத்தி, தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளும் அளவுக்கு முன்னேறியதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் நிச்சயம் பாராட்டலாம்.

ரூ.15,128 கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டைப் பெறும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சில வாரங்களுக்கு முன்னர் நிறைவேறிய நிலையில், கடந்த வாரத்தில் ரூ.10,399 கோடி மதிப்பில் 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ரூ.5,137 கோடி மதிப்பில் 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்திய அளவில் தொழில் வளர்ச்சியில் மிகச் சிறப்பாகச் செயல்படும் மகாராஷ்டிராவும் குஜராத்தும்கூட, தமிழகம் இப்போது பெற்றிருக்கும் முதலீட்டைவிட மிகக் குறைவான முதலீட்டையே பெற்றுள்ளன. இந்த ஆரோக்கியமான போக்குக்கு தமிழக அரசாங்கம் எக்காரணம் கொண்டும் அணை போட்டு்விடக் கூடாது. தற்போது நிறைவேறியிருப்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்தான். இந்த நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதுடன், கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் இன்றைய நிலை குறித்து மக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும். சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காதபடி தொழில் நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்பதில் தமிழக அரசாங்கம் தனி கவனம் செலுத்த வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அடுத்த ஆண்டில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த நேரத்தில் மக்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கைகளை தமிழக அரசாங்கம் எடுக்கக் கூடாது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பாடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவு தர, தமிழக மக்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள். இந்தியாவை உலக உற்பத்தி கேந்திரமாக ஆக்க மத்திய அரசாங்கம் எடுக்கும் முயற்சியில் தமிழகமும் தோள் கொடுத்து, சிறப்பாகச் செயல்பட்டால் நம் மக்கள் அனைவரும் மிகுந்த பயனடைவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

-ஆசிரியர்