Published:Updated:

சாதனை படைத்திருக்கும் சென்செக்ஸ்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

மது பங்குச் சந்தையின் முக்கியமான குறியீடான சென்செக்ஸ் இன்று 50000 புள்ளிகளைக் கடந்திருக்கிறது. வரலாற்றில் இதுவரை நிகழாத சாதனை இது என்பது பங்குச் சந்தையில் இருக்கும் முதலீட்டாளர்கள் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இது திடீரென நடந்துவிட்ட அதிசயம் அல்ல. 1979 மார்ச்சில் 100 புள்ளிகளுடன் ஆரம்பமான சென்செக்ஸ், கொஞ்சம் ஏற்றம், கொஞ்சம் இறக்கம், கொஞ்ச காலத்துக்கு பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல் இருப்பது எனப் பல நிலைகளைக் கடந்துதான் இப்போது 50000 புள்ளிகளைத் தொட்டிருக்கிறது. 90-களில் ஹர்ஷத் மேத்தா மோசடி, 2000-த்தில் டாட் காம் பபுள் (bubble), 2003-ல் கேத்தன் பரேக் மோசடி, 2008-ல் அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சி, 2010-க்குப் பிறகு, நம் நாட்டில் நிகழ்ந்த பல வங்கி மோசடிகள், பணமதிப்பு நீக்கம் இப்படி பல பின்னடைவுகளைக் கண்டதுதான் நம் பங்குச் சந்தை. அதேசமயம், உயர்வை நோக்கி நடைபோடவும் தவறவில்லை. அந்த வீறுநடையின் விளைவாகவே சென்செக்ஸ் இப்போது புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

சென்செக்ஸின் இந்தச் சாதனை நமக்கு சொல்வது என்ன? சென்செக்ஸ் இப்போது கண்டிருக்கும் வளர்ச்சியானது இத்துடன் முடிந்துவிடப் போவதில்லை. இனிவரும் காலங்களிலும் அதன் வளர்ச்சி ஏற்ற இறக்கத்துடன் அமைந்தாலும் நீண்டகாலத்தில் புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டு சாதனை படைக்கும் என்பதுதான். பொறுயுடன் கவனமாக நாம் செயல்பட்டால், இப்போது நாம் பார்த்த சாதனையைவிட பெரிய சாதனையை நம்மால் பார்க்க முடியும்.

இந்த நிலையில், தனிமனிதர்கள் எல்லாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள நாம் தேர்வு செய்யும் முதலீட்டில் தங்கம், ரியல் எஸ்டேட் என்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், தங்கள் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப நம் முதலீட்டின் ஒரு பகுதியை பங்குச் சந்தையில் நேரடியாகவோ, மியூச்சுவல் ஃபண்ட் மூலம் மறைமுகமாகவோ முதலீடு செய்ய வேண்டும். கடந்த காலங்களில் பங்குச் சந்தை மூலம் கிடைத்த லாபத்தை மனதில் வைத்து, அதே அளவு லாபம் கிடைக்கும் என்கிற நோக்கத்தில் நிச்சயம் முதலீடு செய்யக் கூடாது.

இதற்கு, பங்குச் சந்தையின் செயல்பாடு எப்படி அமையும் என்பதை எதிர்கால சந்ததிக்கு அவசியம் கற்றுத் தர வேண்டும். ‘பங்குச் சந்தையா... அது சூதாட்டமாச்சே...’ என்று தவறான எண்ணத்தை அவர்களிடம் புகுத்தி எந்தப் பலனும் இல்லை. குளத்தில் குதிக்காதே என்று சொல்லித் தருவதைவிட, குளத்தில் குதித்தால் எப்படித் தப்பிக்கலாம் என நீந்தக் கற்றுக்கொடுப்பதே சரியான வழிகாட்டலாக இருக்கும்.

சென்செக்ஸ் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கும் இந்தச் சமயத்தில் அது தரும் வருமானத்தில் ஒரு சில சதவிகிதங்களையாவது நாமும் பெறுவதற்கான வழிகளை நாம் மேற்கொள்வோம்!

- ஆசிரியர்