`எத்தனை கஷ்டம் வந்தாலும் நம்பிக்கையை மட்டும் இழக்கவே கூடாது’ என்பார்கள். `இன்று கஷ்டம் வரலாம்; நாளை சரியாகிவிடும்’ என்கிற எண்ணத்தில் வாழ்க்கையில் தொடர்ந்து பயணிக்க அடிப்படையாக இருப்பதே இந்த நம்பிக்கைதான். இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில், `நம் எதிர்கால வாழ்க்கை நன்றாக இருக்கும்’ என்கிற நம்பிக்கை குறைந்துகொண்டே வருவது வருத்தத்தக்க உண்மை.

அண்மையில் நம் மத்திய ரிசர்வ் வங்கி, நம் நாட்டிலுள்ள 13 முக்கிய நகரங்களில் வசிக்கும் 5,334 பேரிடம் சர்வே செய்தபோது, எதிர்காலம் குறித்த நம்பிக்கை 85.7 புள்ளிகளாகக் குறைந்திருப்பது தெரியவந்திருக்கிறது. கடந்த செப்டம்பரில்கூட இது 89.4 புள்ளிகளாக இருந்தது. இந்த சர்வேயின்படி, 100 புள்ளிகளுக்குக் கீழே இருந்தால், நிகழ்காலம் குறித்து நெகட்டிவ் மனநிலையில் இருப்பதாக அர்த்தம். நிகழ்காலப் பொருளாதார வளர்ச்சிமீதுதான் நம்பிக்கை இல்லை; எதிர்கால வளர்ச்சிமீதாவது நம்பிக்கை அதிகரிக்கிறதா என்றால் அதுவும் இல்லை. ஓராண்டுக்குப் பிறகான பொருளாதார வளர்ச்சி குறித்த நம்பிக்கை 118 புள்ளிகளிலிருந்து 114 புள்ளிகளாகக் குறைந்திருக்கிறது.

‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதுபோல இந்த சர்வே முடிவைக் கருத வேண்டியிருக்கிறது. கடந்த ஆறு மாதங்களாகவே நம் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து குறைந்துவருகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு புள்ளிவிவரம் வெளியாகி, எதிர்காலம் குறித்த நம் நம்பிக்கையைச் சிதைக்கிறதே தவிர, `நிலைமை சரியாகிவிடும்’ என்கிற எண்ணத்தைத் துளியளவும் ஏற்படுத்துவதாக இல்லை. ஆனால், மத்திய அரசோ இது குறித்தெல்லாம் கவலைப்படுகிற மாதிரி தெரியவில்லை. `ஜி.டி.பி ஏன் குறைகிறது...’ என்று கேட்டால், ‘‘ஜி.டி.பி என்பது வேதமல்ல; எதிர்காலத்தில் அதற்கு எந்த மதிப்பும் இருக்காது’’ என்கிறார் பா.ஜ.க எம்.பி ஒருவர். `வெங்காயம் விலை உச்சத்தை எட்டியிருக்கிறதே...’ என்றால், ‘‘எங்கள் வீட்டில் நாங்கள் அதிகம் வெங்காயம் சாப்பிடுவதில்லை’’ என்கிறார் நிதி அமைச்சர். மக்கள் பிரச்னையில் ஆளும் கட்சியினர் காட்டும் பொறுப்பு இவ்வளவுதானா?

ஆட்டோபொபைல் நிறுவனங்கள் சிக்கலில் சிக்கியிருப்பதால், கடந்த ஓராண்டில் ஒரு லட்சம் பேருக்குமேல் வேலை இழந்திருக்கிறார்கள். உற்பத்தி செய்த பொருள் விற்காமல் போனதால், பணியாளர்களை வேலையைவிட்டு அனுப்ப வேண்டிய நிலை பல நிறுவனங்களுக்கு. இப்படி மனம் நொந்திருக்கும் மக்களை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையளிக்கும்படிப் பேசாமல், மனத்தில் பட்டதைப் பேசுவது எந்த வகையில் நியாயம்?

தற்போது ஏற்பட்டிருப்பது அசாதாரணச் சூழ்நிலைதான். இதற்கான தீர்வுகளும் எளிதானவை அல்ல. விருப்பு வெறுப்பின்றி கலந்தாலோசித்து, எல்லாத் தரப்பினரையும் ஒன்று கூட்டி, வித்தியாசமாகத் திட்டம் தீட்டி முடிவுகாண முயல்வதே சரியாக நடவடிக்கையாக இருக்கும். அதை விட்டுவிட்டு, மக்களின் நம்பிக்கை மேலும் குறையும்படி நடந்துகொள்வதை அனுமதிக்கவே கூடாது!

- ஆசிரியர்