சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி!

நீதி
பிரீமியம் ஸ்டோரி
News
நீதி

பாலியல் வன்முறை செய்வதோடு கொலை செய்யும் அளவுக்குக் கொடூரம் அதிகரித்துள்ளது.

தெலங்கானாவில் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் நான்குபேரைக் காவல்துறையினர் என்கவுன்டர் செய்துள்ளனர். இந்தச் சுவடுகள் காய்வதற்கு முன்பே உத்தரப்பிரதேசம், உன்னாவ் மாவட்டத்தில், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு பெண், நீதிமன்றத்துக்குச் செல்லும்போது, பாலியல் வன்முறை செய்தவர்களாலேயே தீவைத்து எரிக்கப்பட்டு இறந்துபோனார். இந்தியாவையே உலுக்கிய நிர்பயா சம்பவத்துக்கு எதிராக ஒட்டுமொத்த தேசமும் திரண்டபிறகும் ஒவ்வோராண்டும் பாலியல் வன்முறைக்குப் பெண்கள் பலியாகும் அவலம் முடியவில்லை. பாலியல் வன்முறை செய்வதோடு கொலை செய்யும் அளவுக்குக் கொடூரம் அதிகரித்துள்ளது.

‘பாலியல் வன்முறைகளில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்கக் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்’ என்று சொல்பவர்கள் தெலங்கானா என்கவுன்டரை ஆதரிக்கின்றனர். இன்னொருபுறம் ‘என்கவுன்டர் என்பது பெரும்பாலும் போலிமோதல்களே. சட்டத்தைக் கையிலெடுக்கக் காவல்துறையை அனுமதித்தால், அது மோசமான விளைவுகளுக்கே இட்டுச்செல்லும். சட்டப்படி விசாரிக்கப்பட்டே தண்டனை வழங்கப்பட வேண்டும். காவல்துறையால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகளா, இல்லையா என்பதை நீதிமன்றம்தான் முடிவுசெய்ய வேண்டும்’ என்று மனித உரிமை ஆதரவாளர்கள் தெரிவிக்கும் கருத்துகளும் புறக்கணிக்கக்கூடியதல்ல.

ஆனால் இந்த என்கவுன்டர்களை மக்கள் ஏன் ஆதரிக்கிறார்கள், பல சமயங்களில் காவல்துறைமீது அதிருப்தியுடன் இருக்கும் மக்கள், என்கவுன்டர் செய்த காவல்துறையைப் பூத்தூவி ஏன் கொண்டாடுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பெண்கள்மீது மேற்கொள்ளப்படும் குற்றங்களில் உடனடியாக நீதி கிடைப்பதில்லை என்பதுதான் மக்களின் கோபத்துக்குக் காரணம். வழக்குகளை விசாரிப்பதில் ஏற்படும் தாமதம், சட்ட நடைமுறைகளின் குளறுபடி, சட்டத்தின் ஓட்டைகளில் செல்வாக்கானவர்கள் தப்பித்துக்கொள்வது, தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும் மேல்முறையீட்டுக்கு மேல் மேல்முறையீடுகள், கருணைமனுக்கள் என தண்டனைகள் உறுதிசெய்யப்படாமலே இழுத்தடிக்கப்படுவது ஆகியவை குற்றங்களை மேற்கொள்பவர்களுக்கு பயம் இல்லாமல் செய்துவிடுகின்றன.

இந்த ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கில், குற்றவாளிகள்மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச்சட்டம் ரத்து செய்யப்படும் அளவுக்கு அரசுத்தரப்பு வாதம் பலவீனமாக இருந்தது. உத்தரப்பிரதேச உன்னாவ் மாவட்டத்தில் எம்.எல்.ஏ மீது பாலியல் குற்றச்சாட்டை எழுப்பிப் போராடிய பெண்மீதே கொலைமுயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளிலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடியான நீதி வழங்கப்படவில்லையே?

இன்னொருபுறம், ‘நீதிமன்றங்களில் வழக்குகள் குவிந்துகிடக்கின்றன. இந்த வழக்குகளை விசாரிப்பதற்குப் போதுமான நீதிபதிகள் இல்லை’ என்று முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பிரதமருக்குக் கடிதம் எழுதியதையும் கவனிக்க வேண்டும். நீதித்துறையில் காலியிடங்கள் நிரப்பப்படாததும், வழக்குகள் குவிந்துகிடப்பதும் தாமதிக்கப்படும் நீதிக்குக் காரணம். பெண்கள்மீதான குற்றங்கள் அதிகரித்துவரும் சூழலில் நீதி வழங்கும் முறை மெத்தனமாக இருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி. அது மட்டுமல்ல, இழைக்கப்பட்ட அநீதியும்கூட!