நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த அதிர்ச்சியளிக்கும் கணிப்பு ஃபிட்ச் (Fitch) நிறுவனத்திடமிருந்து வந்திருக்கிறது. `2019-20 நிதியாண்டுக்கான நம் ஜி.டி.பி வளர்ச்சி 4.6 சதவிகிதமாக இருக்கும்’ என்று ஃபிட்ச் கணித்திருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் நம் ஜி.டி.பி வளர்ச்சி, `5.4 சதவிகிதமாக இருக்கும்’ என்று இந்த நிறுவனம் இதற்கு முன்பு சொல்லியிருந்தது.
நமது பொருளாதாரம் குறித்து ரேட்டிங் நிறுவனங்கள் வெளியிட்ட கணிப்புகளிலேயே மிகக் குறைவான ஜி.டி.பி சதவிகிதத்தைக் குறிப்பிட்டிருப்பது ஃபிட்ச்தான். அதைப் பார்க்கும்போது, இந்த இறக்கம் மேலும் தொடர்ந்து நம் ஜி.டி.பி வளர்ச்சி 4% என்ற அளவுக்குப் போய்விடுமோ என்ற கவலை நம் மனதைக் கவ்வுகிறது.
`பொருளாதார வளர்ச்சி குறைந்துவருகிறது’ எனப் பலரும் கடந்த ஆறு மாதங்களாகவே சொல்லிவந்தாலும், மத்தியில் ஆள்பவர்கள் இப்போதுதான் அதை ஒப்புக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். ‘‘நீங்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள் (பொருளாதாரம் பற்றி) என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் சொல்வதை நான் மறுத்துப் பேசப்போவதில்லை. இதிலிருக்கும் பாசிட்டிவான அம்சங்களை மட்டுமே நான் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்’’ என டெல்லியில் அசோசெம் நடத்திய கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கடந்தகால ஆட்சிகளில் இருந்ததைவிட, நமது பொருளாதாரம் தற்போது நன்றாக இருப்பதைப் புள்ளிவிவரங்களுடன் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSபிரதமரின் பாசிட்டிவான அணுகுமுறை நம்மைப் பரவசப்படுத்தினாலும், அந்த மனநிலை மட்டுமே இன்றைய பிரச்னைக்கு முழுத் தீர்வையும் தந்துவிடாது. இன்றைக்கு நமக்குத் தேவை, பொருளாதாரம் மேற்கொண்டு வளரவிடாமல் தடுத்து நிறுத்தும் தடைக்கற்களை உடைத்தெறிவதற்கான சீர்திருத்தங்களைப் படிப்படியாக செயல்படுத்துவதுதான். தற்போது இந்தியாவுக்கு வந்திருக்கும் சர்வதேச நிதி மையத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கீதா கோபிநாத், நமது நாடு சிறப்பான பொருளாதார வளர்ச்சி காண இன்னும் என்னென்ன சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பல அமைப்புகளிலும் ஊடகங்களிலும் விளக்கமாகப் பேசியிருக்கிறார். மத்திய அரசு இவரை அழைத்து, பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான விஷயங்களைக் கலந்துபேசலாமே!
இப்போதுள்ள நிலையில் பாசிட்டிவ் மனநிலையோடு, அறிவுபூர்வமாக ஆராய்ந்து எடுக்கப்படும் பொருளாதார முடிவுகளே எதிர்காலப் பொருளாதார பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். அரசியல்ரீதியாக நிறைவேற்ற வேண்டிய சில முக்கியமான சீர்திருத்தங்களை செய்ய வேண்டிய கட்டாயம் ஆளுங்கட்சிக்கு இருக்கலாம்; அதை நிறைவேற்றும் அதேநேரத்தில், பொருளாதார வளர்ச்சி குறித்த சீர்திருத்தங்களையும் செய்தால் மட்டுமே இனிவரும் காலத்தில் நமது பொருளாதாரம் பலமடையும். மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டுமெனில், பொருளாதாரரீதியில் நாம் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்!
- ஆசிரியர்