இந்த வாரத்தில் 2019-ம் ஆண்டை நிறைவு செய்துவிட்டு, 2020 என்ற முக்கியமான ஆண்டுக்குள் நுழையப்போகிறோம். 2019-ம் ஆண்டு மகிழ்ச்சியும் வருத்தமும் தரத்தக்க நிகழ்வுகளின் தொகுப்பாக இருந்தது. பங்குச் சந்தை இறங்கி நஷ்டம் தந்துவிடுமோ என்ற அச்சம் முதலீட்டாளர்களிடம் இருந்தாலும், அது பெரிய அளவில் இறங்கிவிடவில்லை. சொல்லப்போனால், கடந்த ஓராண்டுக்காலத்தில் சென்செக்ஸ் 15 சதவிகிதத்துக்கு மேல் லாபம் தந்திருக்கிறது.

பங்குச் சந்தையைப்போலவே தங்கமும் 2019-ம் ஆண்டில் 20 சதவிகிதத்துக்கு மேல் லாபம் தந்திருக்கிறது. ஆனால், 2019-ம் ஆண்டில் ரியல் எஸ்டேட் முதலீடு எந்த வகையிலும் சோபிக்கவில்லை. பணவீக்கத்தை ஈடுகட்டும் அளவுக்கான வருமானம்கூட ரியல் எஸ்டேட்டில் கிடைக்கவில்லை. கட்டி முடித்துப் பல ஆண்டுகளான பிறகும் சென்னையில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் விற்க முடியாமல் கிடக்கின்றன.

நடுத்தர மக்களின் பரிபூரண நம்பிக்கையைப் பெற்றிருந்த பொதுத்துறை வங்கி டெபாசிட்டைக்கூட சந்தேகப்படச் செய்துவிட்டது, மும்பையைச் சேர்ந்த பஞ்சாப் அண்ட் மகாராஷ்ட்ரா கோ-ஆபரேட்டிவ் பேங்க்கில் நடந்த ஊழல். இந்த வங்கியில் மக்கள் போட்ட டெபாசிட்டைத் திரும்ப எடுப்பதில் சிக்கல் ஏற்பட, இனி எல்லா வங்கிகளிலும் இப்படி நடந்துவிடுமோ என்ற கேள்வி டெபாசிட்தாரர்களின் மனதில் உருவாகியிருக்கிறது.

முதலீடுகள் இப்படியிருக்க, 2019-ம் ஆண்டில் நம் நாட்டின் பொருளாதாரமோ மேற்கொண்டு முன்னேற முடியாமல் சரிவையே கண்டிருக்கிறது. கடந்த நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) நம் ஜி.டி.பி வளர்ச்சி 6.6 சதவிகிதமாக இருந்தது, தற்போது 4.5 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. கார் விற்பனை கடந்த இரண்டு வருடங்களாகவே சரிவிலிருப்பதால் பலரும் வேலை இழக்கும் நிலை. இவர்களுக்கும் புதிதாகப் படித்து வருபவர்களுக்கும் வேலைவாய்ப்பை மத்திய அரசால் ஏற்படுத்தித் தர முடியவில்லை என்பதால், வேலையில்லாத் திண்டாட்டம் உச்சநிலையில் இருக்கிறது.

பொருளாதாரச் சிக்கலுக்கு எந்த மாதிரியான தீர்வைக் காண்பது என்பது தெரியாமல் மத்திய அரசு தவிப்பதுதான் எல்லாப் பிரச்னைகளுக்கும் மூல காரணம். சர்வதேச நிதி மையத்தின் பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத்தை நம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்ததை, நம் பொருளாதாரச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு முயற்சியாகப் பார்க்கலாம். இது போதாது; பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்க பொருளாதார நிபுணர்கள் அனைவருடனும் கலந்துபேசி, வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் அதிவேகத்தில் எடுப்பதன் மூலம் 2020-ம் ஆண்டை மகிழ்ச்சிகரமான ஆண்டாக நம்மால் மாற்ற முடியும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, `இப்போதிருக்கும் நிலைமை நிச்சயம் மாறும். மகிழ்ச்சியான காலம் மீண்டும் வரும்’ என்ற நம்பிக்கையோடு நாம் பொறுமை காக்க வேண்டியது அவசியம். நம்பிக்கை என்றுமே வீண்போகாது. நாணயம் விகடன் வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

- ஆசிரியர்