Published:Updated:

உடனடித் தேவை வளர்ச்சிக்கான நடவடிக்கை!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

உடனடித் தேவை வளர்ச்சிக்கான நடவடிக்கை!

ஹலோ வாசகர்களே..!

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

ம் பொருளாதார வளர்ச்சி குறித்து கடந்த வாரம் வெளியான இரு புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இந்த 2020-ம் ஆண்டின் முடிவில்கூட நம் நாடு பொருளாதார முன்னேற்றம் அடையுமா என்ற சந்தேகம் தோன்றுகிறது. `2020-ம் ஆண்டில் நம் ஜி.டி.பி வளர்ச்சி 5 சதவிகிதமாக இருக்கும்’ என மதிப்பிட்டிருக்கிறது தேசியப் புள்ளிவிவர அலுவலகம் (NSO). இது, கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவான வளர்ச்சி. இதுகூட இந்த ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் தனியார் நிறுவனங்களின் நுகர்செலவு கணிசமாக அதிகரிக்கும் என்ற அனுமானத்தில்தான் மதிப்பிடப்பட்டிருக்கிறது. அது நடக்காமல் போனால், நம் ஜி.டி.பி வளர்ச்சி 5 சதவிகிதத்தைவிடக் குறையலாம். மேலும், `நம் உத்தேச ஜி.டி.பி வளர்ச்சி (Nominal GDP Growth) 7.5 சதவிகிதமாக இருக்கும்’ என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த வளர்ச்சி.

உடனடித் தேவை வளர்ச்சிக்கான நடவடிக்கை!

இது ஒருபக்கமிருக்கட்டும். `2019-20-ம் நிதியாண்டில் நம் ஜி.டி.பி வளர்ச்சி 6 சதவிகிதமாக இருக்கும்’ என்று உலக வங்கி ஏற்கெனவே மதிப்பிட்டிருந்தது. இப்போது அதைக் குறைத்து, `5 சதவிகிதமாக மட்டுமே இருக்கும்’ என்று மறுமதிப்பீடு செய்திருக்கிறது. நம் பக்கத்து நாடான பங்களாதேஷ்கூட 7.3% ஜி.டி.பி வளர்ச்சிகாணும் நிலையில், நாம் வெறும் 5% வளர்ச்சி மட்டுமே காண்பதற்கு மக்கள் காரணமா அல்லது அரசாங்கம் காரணமா?

தொடர்ந்து சரிந்துவரும் பொருளாதார வளர்ச்சியைச் சரிசெய்ய முக்கியமான நடவடிக்கைகள் எதையும் மத்திய அரசாங்கம் எடுக்கவில்லை. உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக நிதியமைச்சர் அறிவித்த மெகா திட்டம், ஏற்கெனவே நடந்துவரும் திட்டங்களைப் புதிய திட்டங்கள்போலக் காண்பித்து மக்களை மயக்குவதாகவே இருக்கிறது. நம் நாட்டின் முக்கியத் தொழிலதிபர்களை கடந்த வாரம் சந்தித்துப் பேசினார் பிரதமர் மோடி. பொருளாதாரத்தை வளர்ச்சி காணவைக்க இது போதுமா?

மத்திய அரசாங்கம் இப்போது செய்ய வேண்டியது வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை உடனே எடுக்கத் தொடங்குவதுதான். தொழில் நிறுவனங்களுக்கு எளிதில் கடன் கிடைக்க வேண்டும்; வேலைவாய்ப்புகள் பெருக வழிசெய்ய வேண்டும். உற்பத்தியாகும் பொருள்களை மக்கள் வாங்கும் அளவுக்கு அவர்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும். வளர்ச்சியை முன்னிறுத்தும் பல நடவடிக்கைகள் வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டும். கடந்த ஆண்டில் மத்திய அரசாங்கம் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, அரசியல் நடவடிக்கைகளிலேயே கவனம் செலுத்திவிட்டது. இனியாவது பொருளாதாரத்தில் கவனம் செலுத்தினால்தான் நம் நாடு முன்னேறும்!

- ஆசிரியர்