Published:Updated:

வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் பட்ஜெட்டில் தேவை!

ஹலோ வாசகர்களே..!

பிரீமியம் ஸ்டோரி

நிதி ஆண்டு 2020-2021-க்கான பட்ஜெட்டை வருகிற 1-ம் தேதி தாக்கல் செய்யவிருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட்டில் மக்களின் முக்கிய முதல் எதிர்பார்ப்பு, பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளே. நான்கு ஆண்டுகளுக்குமுன் 8.2 சதவிகிதமாக இருந்த நமது ஜி.டி.பி வளர்ச்சி, தற்போது 5 சதவிகிதமாக இறங்கியிருக்கிறது. இது 4.8 சதவிகிதமாகவே இருக்கும் என்கிறது ஐ.எம்.எஃப். பொருளாதார வளர்ச்சி குறையும்போது வேலைவாய்ப்பு குறைகிறது. இதனால் மக்களின் வருமானம் குறைந்து, அவர்கள் செலவழிப்பதும் குறைந்து, பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கிவிடுகிறது. இந்த மோசமான நிலை இன்னும் தொடராமல் இருக்க வேண்டுமெனில், மந்தநிலை என்ற வைரஸ் காய்ச்சலுக்கு மருந்து தர வேண்டும்.

வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் பட்ஜெட்டில் தேவை!

தனிநபர்களுக்கான வருமான வரிச் சலுகை வரம்பு ரூ.5 லட்சம் வரை அனைவருக்கும் உயர்த்தப்பட்டால், ரூ.12,500 வரை மிச்சமாகும். இந்தப் பணத்தைப் பலரும் செலவு செய்வதன்மூலம் பொருள்களின் விற்பனை அதிகரித்து, சுணக்கத்தில் இருக்கும் பொருளாதாரம் மீண்டும் உற்சாகமாகச் செயல்பட அரசின் இந்தச் செயல்பாடு உதவும். அதேநேரம், அரசின் வரி வருமானம் ரூ. 2 - 3 லட்சம் கோடி வரை பற்றாக்குறை ஏற்படும் நிலை தற்போது உருவாகியிருக்கிறது. அரசின் வருமானம் குறைந்தால், வளர்ச்சித் திட்டங்களுக்குச் செய்யப்படும் செலவு குறையும். இதனால் பொருளாதார வளர்ச்சி பாதிப்படையும். எனவே, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வரி வருமானத்தை உயர்த்த வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரியில் உள்ள முரண்களை நீக்க வேண்டும்.

உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து, அவற்றை விரைவாகச் செயல்படுத்துவதன்மூலமே வளர்ச்சியைக் கொண்டுவர முடியும் என்பதால், அதுகுறித்த தெளிவான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் அவசியம் தேவை. தரமான கல்வியும், சுகாதாரமும் பணக்காரர்களுக்கு மட்டுமே என்றிருக்கும் நிலையை மாற்றி, சாதாரண மக்களுக்கும் கிடைக்கச் செய்யும் நடவடிக்கைகள் நிச்சயம் தேவை. நிலச் சீர்திருத்தம், நிதித்துறை சார்ந்த சீர்திருத்தங்கள் உட்பட பல சீர்திருத்தங்களைச் செய்தால் மட்டுமே வளர்ச்சி என்பது இனி நிலையானதாக இருக்கும்.

நம் நாட்டில் சேவைத்துறையானது தற்போது ஓரளவுக்கு நன்றாகவே செயல்படுகிறது. உற்பத்தித்துறை மற்றும் விவசாயத்துறையின் வளர்ச்சிக்குத் தேவையான சரியான நடவடிக்கை எடுத்துவிட்டால், நம் பொருளாதாரம் மீண்டும் வேகமெடுக்கும். நமது இந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறுமா என்பதை இன்னும் ஒரு வார காலம் பொறுத்திருந்து பார்ப்போம்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு