நடப்பு
Published:Updated:

வியாபாரத்துடன் அரசியலைக் கலக்காதீர்கள்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

கடந்த ஓராண்டுக் காலமாக ஏற்றத்தின் போக்கில் மட்டுமே இருந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த புதன்கிழமை அன்று முதன்முதலாக சிறிது இறங்கியிருப்பதைப் பார்த்து, மகிழ்ச்சி அடைவதைவிட ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் மீதும், மத்திய அரசின் மீதும் சந்தேகப்பட ஆரம்பித்துள்ளனர் மக்கள். இந்த சந்தேகத்துக்கு என்ன காரணம்?

கடந்த ஆண்டு (2020) மார்ச்சில் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.72.28-ஆக இருந்தது. இதன் பிறகு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்த பின்னும் நம்மூரில் பெட்ரோல், டீசல் விலையை ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் குறைக்கவில்லை. குறைக்கும்படி மத்திய அரசும் சொல்லவில்லை. ஆனால், ஊரடங்கு கொஞ்சம் தளர்த்தப்பட்டபின், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர, நம் நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலையை ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் உயர்த்தின. இதனால் விலைவாசி உயர்வு ஏற்பட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதற்கும் மத்திய அரசாங்கம் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.

தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டபின், மார்ச் 1-ம் தேதி முதல் இந்தியா முழுக்க பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இத்தனைக்கும் இந்த நாள்களில் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 70 டாலர் வரை உயர்ந்தது. தேர்தல் நடக்கவிருக்கும் இந்த சமயத்தில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால், மக்களிடம் அதிருப்தி உருவாகும். இதனால் தனக்கு சாதகமாக ஓட்டு விழாது என பி.ஜே.பி அஞ்சுவதே இதற்குக் காரணம் என்பது பட்டவர்த்தனமாகவே தெரிகிறது.

வணிக ரீதியில் லாபம் வேண்டும் என்கிறபோது விலையை உயர்த்துவது, அரசியல் ரீதியில் லாபம் வேண்டும் என்கிறபோது விலையைக் குறைப்பது / உயர்த்தாமல் விடுவது என்பது, ஆளும்கட்சிக்கு அழகாக இருக்கலாம். ஆனால், அரசாங்கத்துக்கு அழகாக இருக்க முடியாது. முதல்நாள் வரை விலை உயர்வை நியாயப்படுத்தி பேசிவிட்டு, தேர்தல் என்றதுமே நிலைமாறும் அரசை, மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஓர் அரசு என்று யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

விலை உயர்வு ஆரம்பமானபோதே மக்களும் எதிர்க்கட்சியினரும் எதிர்க்குரல் கொடுத்தனர். அப்போதே... மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரியைக் குறைத்திருந்தால், அது நியாயமான செயலாக இருந்திருக்கும். அதைவிடுத்து, வாக்கு வங்கி அரசியலுக்காக இப்படி இஷ்டப்படி செயல்படுவது... இத்தனை நாள்களாகத் தங்களை ‘சுத்தம் சுயம்பிரகாசம்’ என்று ‘டமார’மடித்துக்கொண்டிருந்த பி.ஜே.பி அரசாங்கத்தின் மீதும் கறை படிகிறது என்பதையே காட்டுகிறது.

விலையை இஷ்டம்போல உயர்த்துவது, ஒருகட்டத்தில் மக்களை நடுத்தெருவுக்கே கொண்டுவந்துவிடும். அதேபோல, ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்களின் செயல்பாடுகளில் அரசியலைக் கலக்கவிடுவது, அவற்றின் எதிர்கால வளர்ச்சிக்கே சாவுமணி அடித்துவிடும்!

- ஆசிரியர்