அந்தக் கல்வி, வரலாற்றுணர்வைக் கூர்மையாக்குவதாகவும், சிந்திக்கும் மனப்பான்மையை வளர்ப்பதாகவும், பண்பாட்டு மதிப்பீடுகளை வலியுறுத்துவதாகவும் இருக்கவேண்டும். ஆனால், அரசுப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்படாத நிலை, மனப்பாடக் கல்வி முறை, கல்வியில் தனியார்மயம் எனப் பிரச்னைகளும் உரையாடலும் ஓயாத நிலையில், புதிய கல்விக்கொள்கை வரைவு முன்வைக்கப்பட்டது.

‘மும்மொழிக்கொள்கை’ என்ற வரைவின் அம்சமே தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மொழித்திணிப்புக்கு எதிரான போராட்ட வரலாறு கொண்ட தமிழகம், போர் முகம் காட்டியதில் வியப்பில்லை. பிறகு வரைவு அறிக்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்கள் கருத்து சொல்வதற்கான காலமும் நீட்டிக்கப்பட்டது. புதிய கல்விக்கொள்கையின் பல்வேறு அம்சங்கள் குறித்து பல்வேறு பார்வைகள் முன்வைக்கப்படும் சூழலில், பண்பாட்டின்மீதும் சமூகத்தின்மீதும் அக்கறை கொண்டவர்கள் இதுகுறித்த திறந்த விவாதங்களை நடத்த முன்வரவேண்டும்.
பன்மைத்துவக் கலாசாரம்கொண்ட இந்தியாவில், கல்விமுறையும் பன்மைத்துவமாய் இயங்கும் ஒன்றாக இருக்கவேண்டும். ஆனால் ‘ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே மொழி; ஒரே பண்பாடு’ என்று ஒற்றைத்துவத்தைத் திணிப்பவர்களால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஏற்கெனவே ஐயத்துடன் பார்க்கப்படும் நிலையில், இந்தப் புதிய கல்விக்கொள்கையும் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
கல்வி, மாநிலப்பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டதே அரசியல் அநீதி எனும்போது, தேசியக் கல்வி ஆணையமே இனி கல்வி தொடர்பான முடிவுகளை எடுக்கும் எனும் அம்சம், ‘நீட்’ நுழைவுத்தேர்வு குறித்தே இன்னமும் அதிருப்தி நிலவும் சூழலில், கலைக்கல்லூரிகளுக்கும் நுழைவுத்தேர்வு, மூன்றாம் வகுப்பிலிருந்து அரசுத்தேர்வு போன்ற கட்டாயங்கள் இடைநிற்றலை அதிகமாக்கும். மாநிலங்களின் தனித்தன்மையை அழிக்கும் என்றெல்லாம் கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அரசியல் நோக்கங்களையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு, இந்தக் கல்விமுறை நம் குழந்தைகளின் எதிர்காலத்தை எப்படி உருவாக்கப்போகிறது என்பது குறித்த விருப்பு வெறுப்பற்ற உரையாடல்களை வளர்த்தெடுப்போம்.
- ஆசிரியர்
