நடப்பு
பங்குச் சந்தை
அறிவிப்பு
Published:Updated:

நம் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

`நம் நாட்டில் மக்களின் சேமிப்பு வேகமாகக் குறைந்துவருகிறது’ என்ற செய்தி உண்மையிலேயே நம் எல்லோரையும் வருத்தமடையச் செய்கிறது. அறுவடைக் காலம் முடிந்தவுடன் விதை நெல்லை முதலில் தனியே எடுத்துவைத்து, பத்திரப்படுத்தி, பிற்காலத்தில் பயன்படுத்துவது நமது பண்பாடு. வரவு எட்டணாவாக இருந்தாலும், அதைச் சிக்கனமாகச் செலவு செய்து, சிறுகச் சிறுக சேமித்து, அதைப் பெரும் செல்வமாக உயர்த்திக் காட்டியவர்கள் நமது முன்னோர்கள்.

ஆனால், இன்று நமது மக்கள் சேமிப்பின் முக்கியத்துவத்தை மறந்து வருகிறார்கள். கடந்த 2012-ம் நிதியாண்டில் 34.6 சதவிகிதமாக இருந்த நமது சேமிப்பு விகிதம், கடந்த 2019-ம் ஆண்டில் 30.1 சதவிகிதமாகக் குறைந்திருப்பதாகச் சொல்கின்றன புள்ளிவிவரங்கள். கடந்த 2003-04-ம் ஆண்டில் நமது சேமிப்பு மிகக் குறைந்த அளவில் அதாவது, 29% என்ற அளவில் இருந்தது. அடுத்துவரும் ஆண்டுகளில் மீண்டும் இந்த அளவை எட்டிவிடுமோ என்ற அச்சம்தான் இப்போது நமக்கு ஏற்படுகிறது.

கடந்த காலத்தில் சேமிப்புக்கு அதிக முக்கியத்துவம் தந்துவந்த நாம், தற்போது அதைச் செய்யாமல் தவறவிட என்ன காரணம்? வருமானம் குறைந்து, செலவு அதிகரித்திருப்பது முதல் காரணம். கிடைக்கும் வருமானத்திலும் பெரும் பணம் பொருள்களை வாங்குவதற்கே சரியாகப் போய்விடுவது இரண்டாவது காரணம். வீட்டு உபயோகப் பொருள் புதிதாக எது வந்தாலும் அதை வாங்குவது, ஆண்டுகொரு முறை செல்போனை மாற்றுவது என்கிற மாதிரியான தீயபழக்கம் நடுத்தர வர்க்கத்தினரிடம் பெருகிவரும் நிலையில் சேமிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகிறது.

நுகர்வுக் கலாசாரமும், `சேமிப்பு’ என்ற சிந்தனையே இல்லாத அணுகுமுறையும் நம் மக்களையும் ஆட்கொண்டுவிடாதபடி தடுத்து நிறுத்துவதன் மூலம்தான் இந்தப் பிரச்னைக்கான தொடர்கண்ணியை நாம் அறுக்க முடியும். சேமிப்பின் அவசியத்தை பள்ளிப் பருவத்திலிருந்தே சொல்லித்தந்து உற்சாகப்படுத்த வேண்டும். மக்கள் சேமிக்கும் பணம் அவர்களுக்குத் திரும்பக் கிடைப்பதற்கான உத்தரவாதமான சூழ்நிலையை அரசாங்கம் உருவாக்கித் தரவேண்டும். மக்களின் பணத்தைக் கொள்ளை அடித்து, அவர்களை ஏமாற்ற நினைப்பவர்களுக்குக் கடும் தண்டனை அளிக்க வேண்டும்.

ஏனைய பிரிக்ஸ் (BRICS) நாடுகளுடன் ஒப்பிடும்போது, நமது சேமிப்பு விகிதம் அதிகமாக இருந்தாலும், இனிவரும் ஆண்டுகளில் அந்த விகிதம் அதிகரிக்க வேண்டுமே தவிர, குறைய நாம் அனுமதிக்கவே கூடாது. பொருளாதார வளர்ச்சிக்கு பொருள் நுகர்வு அவசியம். அந்தப் பொருளாதார வளர்ச்சி நிலைத்திருக்க வேண்டுமெனில், சேமிப்பு மிக மிக அவசியம். இனி, நம் முதல் செலவே சேமிப்பாக இருக்கட்டும்!

- ஆசிரியர்