Published:Updated:

2,000 ரூபாய் நோட்டு குழப்பத்துக்கு சரியான தீர்வு!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

2,000 ரூபாய் நோட்டு குழப்பத்துக்கு சரியான தீர்வு!

ஹலோ வாசகர்களே..!

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

‘இனிமேல் எங்கள் வங்கி ஏ.டி.எம்-கள் மூலம் ரூ.2,000 நோட்டுகளை விநியோகிக்க மாட்டோம்’ என இந்தியன் பேங்க் அறிவிக்க, இனி ரூ.2,000 நோட்டுகள் செல்லாது என மக்கள் நினைத்துவிட்டார்கள். இது தொடர்பாக வாட்ஸ்அப்களிலும் வதந்தி பரவி, குழப்பத்தை மேலும் அதிகமாக்கியது. இதைத் தொடர்ந்து, ‘‘2,000 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்திலிருந்து நீக்க வங்கிகளுக்கு எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை’’ என்று விளக்கம் தந்ததன் மூலம் குழப்பத்துக்குத் தற்காலிக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

ரூ.2,000 நோட்டால் மக்களுக்கு எப்போதுமே சிரமம்தான். உயர் மதிப்பிலான அந்த நோட்டை வைத்துக்கொண்டு, சில்லறை கிடைக்காமல் அவதிப்படுபவர்கள் நிறைய பேர். தவிர, போலி ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் புழங்குவதும் இதில்தான். நாட்டிலேயே மிக அதிகமாக நம் தமிழகத்தில், 12,560 என்ற எண்ணிக்கையில் போலி ரூ.2,000 நோட்டுகள் பிடிபட்டிருப்பதை அறிந்த பிறகு, மக்கள் இந்த நோட்டை வாங்குவார்களா?

2016-ல் பணமதிப்பு நீக்கம் வந்தபோது, பழைய ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை வேகமாக மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்காக ரூ.2,000 நோட்டு அறிமுகமானது. கடந்த மூன்று ஆண்டுகளில் 500 ரூபாயை அதிக அளவில் அச்சடித்து, புழக்கத்துக்குக் கொண்டுவந்து, ரூ.2,000 நோட்டை முழுவதுமாக ஒழித்துக்கட்டும் வேலையை மத்திய அரசாங்கம் செய்திருக்க வேண்டும். ரூ.2,000 நோட்டுகள் வங்கி ஏ.டி.எம்-கள் மூலம் விநியோகமாவது ஓரளவுக்குக் குறைந்திருந்தாலும், இனிவரும் நாள்களில் அவற்றைப் புழக்கத்திலிருந்து முழுமையாக, அதே நேரத்தில் மக்களுக்கு எந்தப் பாதகமும் ஏற்படாமல் நீக்க மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் 29.14 கோடி பேருக்கு ரூபே கார்டு தரப்பட்டுள்ளது. இந்த கார்டுகள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே தற்போது பயன்பாட்டில் உள்ளன. இந்த கார்டுகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது தெரியாமலிருப்பது, இவற்றைப் பயன்படுத்தும் அளவுக்கு கிராமப்பகுதிகளில் ஆன்லைன் தொழில்நுட்ப வசதிகள் இல்லாமல் இருப்பது போன்றவை ரூபே கார்டுகளுக்கு முக்கியத் தடைகளாக உள்ளன.

மத்திய அரசாங்கம் இந்தத் தடைகளை நீக்கி முழுவீச்சில் கார்டுகளின் பயன்பாட்டை அதிகப்படுத்துவதன் மூலம், ரொக்கப் பணத்தின் பயன்பாட்டைப் பெருமளவுக்குக் குறைக்க முடியும். உடனடியாக இந்த நிலையை அடைய முடியாவிட்டாலும், முழுமையான ஆன்லைன் பணப் பரிமாற்றம் என்பதே நம் இலக்காக இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்யாமல், `2024-ம் ஆண்டுக்குள் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்...’ என்று பேசுவதால் எந்தப் பயனும் இருக்காது!

- ஆசிரியர்