Published:Updated:

தொடரும் வங்கிச் சிக்கல்கள்... எப்போதுதான் விடிவு?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

மீண்டும் பெரும் சிக்கலில் மாட்டியிருக்கிறது ஒரு வங்கி. ஆறு மாதங்களுக்கு முன்னர் மும்பையைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் பஞ்சாப் அண்ட் மஹாராஷ்ட்ரா கோ-ஆபரேட்டிவ் பேங்க் வாராக் கடன் பிரச்னையில் சிக்க, அதில் டெபாசிட் செய்திருந்த முதலீட்டாளர்கள் பணத்தை எடுக்கப் படாதபாடுபட்டார்கள். அதே மாதிரியான ஒரு பிரச்னையை இப்போது `யெஸ் பேங்க்’ வாடிக்கையாளர்கள் அனுபவிக்கிறார்கள். இதற்கிடையே யெஸ் பேங்கைக் காப்பாற்ற மத்திய அரசாங்கம் எடுத்திருக்கும் பல்வேறு நடவடிக்கைகள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

யெஸ் பேங்க் முடக்கத்துக்கு முக்கியமான காரணங்கள் இரண்டு. முதலாவது, இந்த வங்கியை நடத்திவந்த குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம். இரண்டாவது, கடந்த காலத்தில் எக்கச்சக்கமாகத் தரப்பட்ட தரமற்ற கடன்கள் வாராக் கடன்களாக மாறியிருப்பது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த வங்கியின் வாராக் கடன் ரூ.313 கோடியிலிருந்து ரூ.7,882 கோடியாக உயர்ந்திருக்கிறது.

இப்போது நமக்கு எழும் முக்கியமான கேள்வி, `வங்கியின் வாராக் கடன் இவ்வளவு தூரத்துக்கு உயர மத்திய ரிசர்வ் வங்கி எப்படி அனுமதித்தது’ என்பதுதான். `இந்த வங்கியின் நிர்வாகம் சரியாக மேற்கொள்ளப்படவில்லை’, `ரிஸ்க் மிகுந்தவர்களுக்கே கடன் தரப்பட்டிருக்கிறது’ எனப் பல காரணங்களை இப்போது சொன்னாலும், இவற்றையெல்லாம் ஏன் முன்கூட்டியே கண்டுபிடிக்கவில்லை; இந்தத் தவறுகள் நிகழாதபடி தடுப்பு நடவடிக்கைகள் ஏன் மேற்கொள்ளப்படவில்லை?

இந்த வங்கி கடனாகத் தந்திருப்பதில் பெரும் பகுதி டெபாசிட்தாரர்களின் பணம். அந்தப் பணம் திரும்ப வரவில்லையெனில், மக்கள் கஷ்டப்பட்டு செலுத்திய வரிப் பணத்தை எடுத்துத்தான் டெபாசிட்தாரர்களுக்குத் தர வேண்டியிருக்கும். யாரோ செய்த தவற்றைச் சரிசெய்ய மக்களின் வரிப் பணத்தைப் பயன்படுத்துவது ஏன்... நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான நிதியே மத்திய அரசிடம் போதிய அளவுக்கு இல்லை என்கிறபோது, வங்கிகளைக் காப்பாற்ற மக்களின் வரிப் பணத்தைப் பயன்படுத்தும் அவலம் இன்னும் எத்தனை நாளைக்குத் தொடரும்?

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்ற பழக்கத்தை இனியாவது ஒழித்துக் கட்டிவிட்டு, வங்கிகளின் வாராக் கடன் மேலும் உயராதபடிக்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கமும் ஆர்.பி.ஐ-யும் அவசியம் எடுக்க வேண்டும். வங்கிகள் மீதான நம்பிக்கையை இழப்பது நமது அரசின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழப்பதற்குச் சமம் என்பதை மத்திய அரசாங்கம் உணர வேண்டும்!

- ஆசிரியர்