Published:Updated:

தங்கம் வாங்குவதைத் தவிர்க்கிறார்களா மக்கள்?

ஹலோ வாசகர்களே..!

பிரீமியம் ஸ்டோரி

மண்ணுக்கு அடுத்தபடியாக நம் மக்கள் அதிகம் விரும்புவதும் நம்புவதும் தங்கத்தைத்தான். ஆண்டுக்கு ஒருமுறை சில கிராம்களாவது தங்கத்தை வாங்காவிட்டால் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிக முக்கியமான கடமையைச் செய்யாமல் விட்டுவிட்டது போன்ற குற்ற உணர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாகத் தங்கம் வாங்குவதைக் குறைத்து வருகிறார்கள் நம் மக்கள். கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கம் இறக்குமதி கடந்த 2020-ம் ஆண்டில் மிகவும் குறைந்திருக்கிறது. 2019-ல் 690 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், 2020-ல் 446 டன்கள் மட்டுமே இறக்குமதி ஆகியிருக்கிறது. தங்க நகைகளுக்கான இறக்குமதியும் கணிசமாகக் குறைந்திருக்கிறது. தங்க நகைக்கான தேவை 2019-ல் 545 டன்களாக இருந்தது; அதுவே 2020-ல் 316 டன்களாகக் குறைந்திருக்கிறது.

நம் மக்கள் தற்போது தங்க நகைகளை வாங்காமல் இருப்பதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. தங்கம் விலை ஏகத்துக்கு உயர்ந்து இருப்பது முக்கிய காரணம். 2019-ல் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.31,500 என்கிற அளவில் இருந்தது. அதுவே 2020-ல் ரூ.42,200 என்கிற அளவில் இருக்கிறது. சமீப காலமாகத் தங்கத்தின் விலை கொஞ்சம் குறைந்ததால், இந்த விலையில் கிடைக்கிறது. இல்லாவிட்டால், ரூ.50,000-க்கும் அதிகமாகவே விற்பனை ஆகும் என்பதே நிஜம். மேலும், கோவிட்-19 ஊரடங்கு காரணமாகப் பலரும் வேலை இழந்திருக்கின்றனர். பலரது வருமானம் கணிசமாகக் குறைந்திருக்கிறது. வருகிற வருமானத்தைக் கொண்டு அத்தியாவசியமான செலவுகளைச் செய்யவே மக்கள் விரும்புகின்றனர்.

என்றாலும், கோவிட்-19-ன் தாக்கம் குறைந்து, பெருவாரியான மக்கள் பாதிப்புகளிலிருந்து வெளிவரும் நிலையில், இந்த ஆண்டு தொடங்கி நம் மக்கள் தங்கம் வாங்குவது அதிகரிக்கும் என வேர்ல்டு கோல்டு கவுன்சில் அமைப்பு தெரிவித்துள்ளது. தங்கம் விலை பெரிய அளவில் குறையாமல் தொடர்ந்து அதிகமாகவே இருப்பதைப் பார்க்கும்போது, இந்த விலையில் வாங்காவிட்டால் இனிவரும் ஆண்டுகளில் விலை மேலும் உயரவே செய்யும் என்கிற அச்சமும் மக்களிடம் இருக்கவே செய்கிறது. எனவே, தங்களால் முடிந்த அளவு மக்கள் இனி வாங்கவே செய்வார்கள்.

நம் முதலீட்டில் ஒரு பகுதியை தங்கமாக வாங்கி முதலீடு செய்வதில் எந்தத் தவறும் இல்லை. அதேசமயம், நம்மிடம் இருக்கும் பணத்தை எல்லாம் தங்கத்திலேயே முதலீடு செய்வது லாபகரமான முடிவாக இருக்காது. ஆசைக்கு சில பவுன் தங்க நகைகளை வாங்கலாம். மற்றபடி இ.டி.எஃப், தங்க பாண்ட் என முதலீடு செய்வதே லாபகரமான முடிவாக இருக்கும்.

இன்றைய நிலையில், தங்கம் மட்டுமே கதி என்று கிடக்காமல், நீண்டகாலத்தில் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் எதிலெல்லாம் கிடைக்கும் என்று ஆராய்ந்து, அதன்படி முதலீடு செய்வதே மக்கள் புத்திசாலித்தனமாக எடுக்கும் முடிவாக இருக்கும்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு