நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

கடனைக் குறைக்காவிட்டால், கஷ்டம்தான்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

கடன், இன்றைய வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. இந்தக் கடன் ஓரளவுக்கு இருந்தால், சமாளித்துவிடலாம். அளவுகடந்துபோனால், பெரும் கஷ்டம்தான் ஏற்படும். இது தனிமனிதர்களுக்கு மட்டுமல்ல, அரசாங்கங்களுக்கும் பொருந்தும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது... தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டைப் படித்தபின்!

தமிழக அரசின் கடன் கடந்த ஆறு ஆண்டுகளில் 100 சதவிகிதத்துக்குமேல் உயர்ந்திருக்கிறது. 2015-16-ம் ஆண்டில் தமிழக அரசின் கடன் ரூ.2.11 லட்சம் கோடி மட்டுமே. இது தற்போது ரூ.4.86 லட்சம் கோடியைத் தொட்டிருப்பதுடன், அடுத்த ஆண்டு முடிவில் ரூ.5.70 லட்சம் கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது நமது மாநிலத்தின் மொத்தப் பொருள் உற்பத்தியில் (GSDP) 26.69% ஆகும். அடுத்து வரும் ஆண்டுகளில் இது குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கவே செய்யும் என்கிறார்கள் நிபுணர்கள்.

வரவுக்குள் செலவு இருந்தால் கடன் என்பது எப்போதும் இருக்காது. ஆனால், தமிழக அரசாங்கமோ வருமானத்தையும் உயர்த்தவில்லை; செலவையும் குறைக்கவில்லை. தமிழக அரசாங்கம் நினைத்தால் வருமானத்தைக் கணிசமாக உயர்த்த முடியும். அரசாங்கத்துக்குச் சொந்தமான மணல், கிரானைட், தாதுமணல் போன்றைவையெல்லாம் ஒப்பந்த அடிப்படையில் அடிமாட்டு விலைக்குத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை நிறுத்தினாலே பல லட்சம் கோடிகள் வருமானத்தைப் பெருக்க முடியும். 100 ரூபாயை அரசாங்கத்துக்குத் தந்துவிட்டு அள்ளப்படும் ஆற்றுமணல் 10,000 ரூபாய்க்கு பொதுமக்களிடம் விற்கப்படுகிறது. 200 ரூபாயைக் கொடுத்துவிட்டு வெட்டப்படும் கிரானைட் கற்கள் 20,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இப்படி ஒவ்வொன்றிலும் பல லட்சம் கோடி ரூபாயை யாரோ சிலர் கொள்ளையடித்துப் பணம் சேர்க்க அரசின் சொத்துகள்தான் கிடைத்தனவா? இவற்றுக்கு சரியான விலையை நிர்ணயம் செய்து அரசே நேரடியாக விற்றிருந்தால், இவ்வளவு பெரிய கடன் சுமை உருவாகியிருக்காதே!

வரவில்தான் இத்தனை கொள்ளை என்றால், செலவு செய்வதிலும் நியாயம் இல்லை. கொரோனாவைக் காரணம் காட்டியும், பொங்கல் பரிசாகவும் தமிழகம் முழுக்க இருக்கிற இரண்டு கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு அளிக்கப்பட்ட இலவசங்களால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு. கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், எல்லோருக்கும் பணத்தை அள்ளி வழங்குவதால், மக்களின் வரிப்பணம்தான் வீணாகும்.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், வாக்கு வங்கி அரசியலையும்... அந்த வாக்குகளை விலைக்கு வாங்குவதற்காகத் தனியார் நிறுவனங்களிடம் நன்கொடை வாங்குவதையும் மனதில் கொண்டேதான் ஆட்சியை நடத்துகின்றன. ராஜாதி ராஜன்களே... இதற்குப் பிறகாவது திருந்தப் பாருங்கள். நீங்கள் நீண்டகால அடிப்படையிலான திட்டங்கள் போடாவிட்டாலும் பரவாயில்லை... கண்ட கண்ட திட்டங்களின் பெயராலும் கடன்களை வாங்கி, எதிர்கால சந்ததிகளின் தலையில் சுமையை ஏற்றாமலிருங்கள்... அதுபோதும்!

- ஆசிரியர்