Published:Updated:

உலகப் பொருளாதாரத்தில் நாம் பின்தங்கக் கூடாது!

ஹலோ வாசகர்களே..!

பிரீமியம் ஸ்டோரி

திக மதிப்பு கொண்ட பொருளாதார நாடுகளில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறிய நமது இந்தியா, இப்போது இரண்டு இடங்களுக்குப் பின்தங்கி மீண்டும் ஏழாவது இடத்துக்கு வந்திருப்பது நாம் எல்லோருமே கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயம்தான்.

கடந்த 2017-ம் ஆண்டில் இங்கிலாந்தையும் பிரான்ஸையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஐந்தாவது இடத்துக்கு வந்தது. ஆனால், உலக வங்கி தற்போது அளிக்கும் தகவல்கள்படி, 2018-ல் இங்கிலாந்து 2.82 ட்ரில்லியன் டாலர் (2017-யைவிட 21 லட்சம் கோடி அதிகம்), பிரான்ஸ் 2.78 ட்ரில்லியன் டாலர் (2017-ல் 19 லட்சம் கோடி அதிகம்) மதிப்பு கொண்ட பொருளாதார நாடுகளாக மாறியுள்ளன. ஆனால், நம் இந்தியாவோ 2.78 ட்ரில்லியன் டாலர் (2017-ஐ விட 12 லட்சம் கோடி அதிகம்) என்ற அளவுக்கு மட்டுமே முன்னேறியுள்ளது.

உலகப் பொருளாதாரத்தில் நாம் பின்தங்கக் கூடாது!

கடந்த 2017-ம் ஆண்டில் நம் நாடு அடைந்த பொருளாதார வளர்ச்சியானது 2018-ல் கணிசமாகக் குறைந்ததே இதற்குக் காரணம். 2017-ல் டாலர் கணக்கில் நம் பொருளாதாரம் 15.72% அளவுக்கு வளர்ந்தது. ஆனால், 2018-ம் ஆண்டிலோ, வெறும் 3.01% மட்டுமே வளர்ச்சி கண்டதுதான், நமது பின்தங்கலுக்கான முக்கியக் காரணம். ஆனால், இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி முன்பைவிட தற்போது வேகமாக இருக்கிறது.

இந்தப் பின்தங்கலை நாம் சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. உலக அளவில் பொருளாதாரச் சூழ்நிலை சரியில்லை; எல்லா நாடுகளிலும் தேவை என்பது குறைவாக இருப்பதால், பொருள் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் நிறுவனங்களின் விற்பனையும் லாபமும் குறைந்து, வேலையை இழக்கும் அபாயத்துக்கு ஆட்பட்டுள்ளனர் மக்கள். இந்த மோசமான நிலையிலும் இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளபோது, நம் நாடு மட்டும் குறைந்த அளவில் பொருளாதார வளர்ச்சி கண்டது ஏன்? நமது மத்திய அரசாங்கமும் இன்னும் நன்றாகத் திட்டமிட்டுச் செயல்பட்டிருந்தால், நம்மாலும் நல்ல வளர்ச்சியைக் கண்டிருக்க முடியுமே! அதை ஏன் செய்யவில்லை என்பது நாட்டின் வளர்ச்சியை விரும்பும் அனைவரும் கேட்க விரும்பும் கேள்வி.

‘‘மோசமான பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக, அடுத்த ஓராண்டு காலத்துக்கு எந்தப் பெரிய முதலீடும் செய்வது கடினம்’’ என்று எல் அண்டு டி நிறுவனத்தின் தலைவர் ஏ.எம்.நாயக் சொல்லியிருப்பதை மத்திய அரசாங்கம் அவசியம் கவனத்தில் எடுத்துக்கொண்டு, நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசாங்கம் இனியும் மெத்தனமாக இருக்காமல், சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டியது அவசியத்திலும் அவசியம். வருகிற 2024-ல் ஐந்து லட்சம் கோடி டாலர் மதிப்பு கொண்ட பொருளாதார நாடாக நம் நாடு மாறவேண்டுமெனில், நமது அரசாங்கமும் இன்னும் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு