Published:Updated:

இரண்டாவது அலையை எச்சரிக்கையுடன் எதிர்கொள்வோம்!

தலையங்கம்

தலையங்கம்

இரண்டாவது அலையை எச்சரிக்கையுடன் எதிர்கொள்வோம்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என உலகின் பல நாடுகள் கொரோனாவின் நான்காவது அலையை சமாளிப்பதற்குப் போராடிவரும் சூழலில், இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் பரவல் உறுதியாகியுள்ளது.

கடந்த ஒரே மாதத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நான்கரை மடங்கு உயர்ந்துள்ளது. இந்த ஏப்ரல் 4-ம் தேதி, இந்தியாவில் புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா உச்சத்தில் இருந்த கடந்த ஆண்டு செப்டம்பரில்கூட இந்த அளவுக்கு எண்ணிக்கை இருந்ததில்லை.

இந்தியாவில் தினமும் கண்டறியப்படும் புதிய கொரோனா நோயாளிகளில் சரிபாதிக்கும் மேற்பட்டவர்கள் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். இதைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கையும், வார இறுதி ஊரடங்கையும் அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. பொது இடங்களில் காட்டப்பட்ட அலட்சியமும், விழாக்கள் மற்றும் விசேஷங்களில் பெருங்கூட்டங்களாகக் கூடியதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றாததுமே இந்த அளவுக்கு மகாராஷ்டிரா பாதிப்புக்கு உள்ளானதற்குக் காரணங்கள் என்பதை மறுக்க முடியாது.

தமிழகத்திலும் தேர்தல் நேரத்தில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் எல்லாக் கட்சிகளுமே கூட்டத்தைத் திரட்டிப் பிரசாரம் செய்தன. தேர்தல் ஆணையமும் அதைக் கட்டுப்படுத்தவில்லை. அரசும் அரசியல்கட்சிகளும் எந்த அளவுக்குப் பொறுப்பற்ற தன்மையுடன் கொரோனா அபாயத்தை அணுகுகின்றன என்பதை இது உணர்த்துகிறது. பொதுமக்களாகிய நாமும் திருமண விழாக்கள் தொடங்கி மதநிகழ்வுகள்வரை கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கவில்லை. இவையெல்லாம்தான் கொரோனாப் பரவலுக்குக் காரணம் என்பதை உணர்ந்து இனியாவது எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

இரண்டாவது அலையை 
எச்சரிக்கையுடன் எதிர்கொள்வோம்!

‘`தேர்தலுக்குப் பிறகு கசப்பான அனுபவத்துக்கு மக்கள் தயாராக வேண்டும்’’ என, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகிறார். ‘`கொரோனாப் பரவல் தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் அதிகரித்துவருகிறது’’ என்கிறார் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன். இதைக் கட்டுப்படுத்த காய்ச்சல் பரிசோதனை முகாம்களை மீண்டும் தமிழகம் முழுக்க நடத்த அரசு முடிவெடுத்திருப்பது ஒரு நல்ல நடவடிக்கை. கொரோனாத் தொற்றுடன் வருவோருக்கு சிகிச்சை அளிப்பதற்கான தற்காலிக மருத்துவ முகாம்களையும் மீண்டும் தொடங்க வேண்டும். பரிசோதனைகளும் சிகிச்சைகளும் முழு வீச்சில் நடந்தால், இந்த இரண்டாவது அலையை நிச்சயம் நாம் வெற்றிகொள்ள முடியும். முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது, கூட்டமாகச் சேரும் நிகழ்வுகளைத் தவிர்ப்பது என மக்கள் ஒத்துழைத்தால், இந்த அச்சம் அகன்றுவிடும்.

இந்தியாவில் இதுவரை ஒரு கோடிப் பேர் மட்டுமே இரண்டு தவணைத் தடுப்பூசி போட்டுக்கொண்டு பாதுகாப்பு பெற்றுள்ளனர். இந்தியாவில் கொரோனாத் தடுப்பூசி உற்பத்தியை அதிகரித்தும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைக் குறைத்தும், இந்தியர்களுக்கு அதிக தடுப்பூசி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறது மத்திய அரசு. கொரோனாவிலிருந்து நாம் மீள்வதற்கு மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கையும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிகமிக அவசியம். ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியதைப் போல சுகாதாரக் கடமையையும் நிறைவேற்றுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism