Published:Updated:

யானைப் பசிக்கு சோளப் பொரி!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

யானைப் பசிக்கு சோளப் பொரி!

ஹலோ வாசகர்களே..!

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்
பிரதமர் மோடி அறிவித்திருக்கும் 21 நாள் ஊரடங்கு உத்தரவால் இந்தியாவே முடங்கியிருக்கிறது.

மிக மிக அவசியமான இந்த முடக்க நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு உதவும் வகையில், ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பில் பல அறிவிப்புகளைச் செய்திருக்கிறார் நிதியமைச்சர். ஆனால், இந்த அறிவிப்புகள் போதவே போதாது.

நம் நாட்டில் மொத்தமுள்ள 40 கோடி `ஜன் தன்’ கணக்குகளில் சுமார் 30% மட்டுமே பெண்கள் வைத்திருக்கின்றனர். இவர்களுக்கு ஒரு மாதத்துக்கு ரூ.500 கிடைத்தால் மருத்துவச் செலவுக்குக்கூட போதாது. குறைந்தபட்சம் 1,000 ரூபாயாவது தந்திருக்க வேண்டும்.

இந்தத் திட்டமாவது பரவாயில்லை, மற்ற திட்டங்கள் `வெறும் அறிவிப்பு மட்டும்தான்’ என்கிற அளவிலேயே இருக்கின்றன. உதாரணமாக, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் வழங்கப்படும் ஊதியம் 182 ரூபாயிலிருந்து 202 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. கொரோனா நோய் காரணமாக நாட்டு மக்கள் முடங்கிக்கிடக்கும் இந்தச் சமயத்தில், என்ன வேலை நடக்கப் போகிறது, யார் வேலைக்கு வரப் போகிறார்கள்... ஏப்ரலுக்குள் கொரோனா பாதிப்பு நீங்கி, கிராமப்புற ஊழியர்கள் வேலைக்கு வந்து பயனடைவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

ஏற்கெனவே அறிவித்திருந்த பழைய திட்டத்தைப் புதிய திட்டம்போல (உதாரணம், விவசாயிகளுக்கு ரூ.2,000 தருவது) அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர். விளைவித்த பொருள்களை நல்ல விலைக்கு விற்க முடியாத நிலையில் விவசாயிகள் இருக்கும்போது, இந்த உதவி அவர்களுக்கு எம்மாத்திரம்..?

நிதியமைச்சர் அறிவித்த திட்டங்களில் ஒன்றுக்கு மட்டும் ‘சபாஷ்’ சொல்லலாம். அது, `வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளர்கள் செலுத்த வேண்டிய மாதச் சந்தாவை மத்திய அரசே மூன்று மாதங்களுக்குச் செலுத்திவிடும்’ என்பது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும், அந்தத் தொழிலை நடத்துகிறவர்களுக்கும் அரசின் இந்த நடவடிக்கை மிகவும் உதவும்.

வட்டி விகிதத்தைக் குறைத்து, கடனுக்கான அசல் மற்றும் வட்டியை மூன்று மாதங்களுக்குச் செலுத்த வேண்டியதில்லை என்ற ரிசர்வ் வங்கியின் முடிவு, மக்களின் கைகளில் ஓரளவுக்குப் பணம் புழங்கச் செய்யும். இதுபோல ஒட்டுமொத்த நாடும் பயன்பெறும் வகையில் பல நல்ல திட்டங்களைக் கூடிய விரைவில் நிதியமைச்சர் அறிவிப்பார் என்ற நம்பிக்கையுடன் நாம் எல்லோரும் வீட்டைவிட்டு வெளியேறாமல் பாதுகாப்புடன் இருப்போம்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism