Published:Updated:

வங்கிகள் வங்கிகளாகவே இருக்கட்டும்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

மிகப்பெரிய துயரத்திலிருக்கிறார்கள் மக்கள். தொற்றுநோய் பயம் ஒரு பக்கம்; கடந்த இரு வார காலமாக வீட்டைவிட்டு வெளியேற முடியாததால் வருமானம் குறைந்திருப்பது இன்னொரு பக்கம்.

இந்தக் கஷ்டம் போதாதென்று வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியிருக்கின்றன பல வங்கிகள்.

ஊரடங்கு உத்தரவால் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களால் கடனுக்கான அசலையும் வட்டியையும் கட்ட முடியாது. எனவே, கடன் தவணையை மூன்று மாதங்களுக்குச் செலுத்தாமலிருக்க விலக்கு அளித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. இதற்காக ரிசர்வ் வங்கியை நாம் நிச்சயம் பாராட்டலாம். ஆனால், இதை எல்லா வங்கிகளும் ஒன்றுபோல நடைமுறைப்படுத்தும் வழிமுறையை ரிசர்வ் வங்கி சொல்லாமல்விட்டது ஏன்... வங்கிச் சேவைகளை மக்களுக்குச் சரியாகக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது ரிசர்வ் வங்கியின் முக்கியக் கடமை அல்லவா?!

சரி, போகட்டும். இந்த விஷயத்தில் வங்கிகளாவது கொஞ்சம் கருணை உள்ளத்துடன் நடந்துகொண்டிருக்க வேண்டாமா... `கடன் தவணையைச் செலுத்தத் தேவையில்லை’ என்று ரிசர்வ் வங்கியே சொன்ன பிறகு, அதை அப்படியே நடைமுறைப்படுத்தாமல், ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமாக நடைமுறைப்படுத்துகின்றனவே! `மூன்று மாதங்கள் கடன் தவணையைச் செலுத்தாமல்விட்டால், அதை ஈடுசெய்ய 13 மாதங்கள் தவணையைச் செலுத்த வேண்டும்’ என்று வங்கிகள் சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது.

`மக்கள் தரும் டெபாசிட்டைத்தான் வங்கிகள் கடனாகத் தருகின்றன. டெபாசிட்டுக்கு வட்டி தர வேண்டியிருப்பதால், கடனுக்கும் வட்டி தந்தே ஆக வேண்டும்’ என்ற வங்கியின் வாதம் நியாயமானதே. ஆனால், இப்போது நிலவும் கஷ்ட காலத்தைக் கணக்கில்கொண்டு, வட்டி விகிதத்தில் 50 சதவிகிதத்தை மானியமாகத் தர மத்திய அரசாங்கம் முடிவு செய்திருக்கலாமே! தொழில் கடன், கிரெடிட் கார்டு கடன், கார் கடன், தனிநபர் கடன்களுக்கெல்லாம் இந்தச் சலுகை வேண்டாம்; குறைந்தபட்சம் வீட்டுக் கடனுக்கும், கல்விக் கடனுக்கும் தந்திருக்கலாமே! பெரும் தொழில் நிறுவனங்களுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் தந்து, அவை வாராக்கடன்களாக மாறியதையெல்லாம் ஏற்றுக்கொண்ட வங்கிகள், எதிர்பாராத காரணத்துக்காக மக்கள் படும் கஷ்டத்துக்கு உதவ ஏன் இத்தனை தயக்கம்?

மக்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண வங்கிகளைத்தான் மலைபோல நம்பியிருக்கிறார்கள். கஷ்ட காலத்தில் வங்கிகள் மக்களை அரவணைத்துச் செல்பவையாக இருக்க வேண்டும். அதற்கு வங்கிகள் எப்போதும் வங்கிகளாகவே இருக்க வேண்டும். அவை ஒருபோதும் கந்துவட்டிக் கடைகளாக மாறிவிடக் கூடாது!

- ஆசிரியர்