Published:Updated:

ஆர்.பி.ஐ அறிவிப்புகள் பலன் தருமா?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

ஆர்.பி.ஐ அறிவிப்புகள் பலன் தருமா?

ஹலோ வாசகர்களே..!

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்
`முடங்கிக்கிடக்கும் நமது பொருளாதாரத்தை மீண்டும் முடுக்கிவிட பெரிய அளவில் நிவாரணத் திட்டத்தை மத்திய அரசாங்கம் அறிவிக்கும்’ என்று நாம் எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்க, சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு, நம்மை ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது நமது மத்திய ரிசர்வ் வங்கி.

வங்கிகள், ரிசர்வ் வங்கியில் வைக்கும் பணத்துக்கான வட்டி (ரிவர்ஸ் ரெப்போ்0.25% குறைப்பு, மாநிலங்களின் குறுகியகால செலவுகளுக்கு ரூ.67,028 கோடி கடன், நபார்டு, சிட்பி போன்ற நிதி அமைப்புகள் மூலம் பிற நிதி நிறுவனங்களுக்குக் கடன் தர ரூ.50,000 கோடி, மைக்ரோ ஃபைனான்ஸ், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி கடனுதவி என ஆர்.பி.ஐ எடுத்திருக்கும் நடவடிக்கைகளால் நிதிச் சேவை நிறுவனங்கள் கொஞ்சம் தெம்பாகச் செயல்பட வாய்ப்பிருக்கிறது. ஆர்.பி.ஐ-யின் இந்த நடவடிக்கைகளால் தொழில் நிறுவனங்களுக்கு எளிதில் கடன் கிடைக்கக்கூடும். இவை, நிதி நெருக்கடி என்ற கவலை நீங்கி, தொழில் துறை முன்னேற்றப் பாதையில் செல்ல உதவும்.

ஆனால், ஆர்.பி.ஐ-யின் இந்த நடவடிக்கைகளால் பொருளாதாரம் முன்னேற்றம் காணுமா என்றால், காணாது. காரணம், கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்தாலும், வங்கிகள் இன்னும் குறைக்கவில்லை. அதிக வட்டிக்கு எந்தத் தொழில் நிறுவனம் கடன் வாங்கும்... தவிர, `கடன் வாங்கும் நிறுவனங்கள் அசலுடன் வட்டியையும் சேர்த்து நிச்சயமாகத் திருப்பிச் செலுத்துமா?’ என்ற கேள்வியும் எழவே செய்கிறது. கொரோனாவுக்குப் பிறகு பிசினஸ் சூழல் தலைகீழாக மாறியிருக்கும் நிலையில், தொழில் கடன் வாங்கப் பலரும் முன்வருவார்களா என்பது கேள்விக்குறியே. அப்படியே வாங்க வந்தாலும், அவர்களை நம்பி வங்கிகள் கடன் தருமா? வாராக்கடன் பிரச்னை நீறுபூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டிருப்பது இன்னும் பெரிதாக வழிவகுக்கும்.

தொழில் நிறுவனங்களுக்கு இப்போதைய முதல் தேவை, பணப்புழக்கம் மட்டுமல்ல; தொழிலை முடங்கிப் போய்விடாமல் கொண்டு செல்வதற்கான அரசின் நிதி உதவி. தயாரிக்கப்படும் பொருள்களுக்கான தேவை ஏற்படும் மக்களிடம் பணம் புழங்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்யாமல், வங்கிகளில் மட்டும் பணப்புழக்கத்தை அதிகரிப்பதால் எந்தப் பயனும் இருக்காது. கோடானு கோடி பேருக்கு வேலை அளித்து, பொருளாதாரத்தை இயக்கும் தொழில் நிறுவனங்களுக்கு என்ன தேவை, மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து, அவற்றை இனியாவது செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நோயாளிக்கு மருந்து தராமல், விசிறியைக்கொண்டு வீசுவதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதை மத்திய அரசாங்கம் உணர வேண்டும்!

- ஆசிரியர்