Published:Updated:

சுறுசுறுப்பாக உழைத்தால் பொருளாதாரம் முன்னேறும்!

ஹலோ வாசகர்களே..!

பிரீமியம் ஸ்டோரி
கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக இருப்பது நமக்கு ஒருபக்கம் கவலையளித்தாலும், தற்போது வெளியாகியிருக்கும் இரண்டு புள்ளிவிவரங்கள் நமது பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருவதைக் காட்டி, நம்மை மகிழ்விப்பதாக இருக்கின்றன.

முதல் புள்ளிவிவரத்தில், நம் நாட்டில் வேலைவாய்ப்பின்மை என்பது கொரோனா காலத்துக்கு முன்பிருந்த நிலையை அடைந்திருப்பதாக இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy-CMIE) தெரிவித்திருக்கிறது. இந்த அமைப்பு நமது பொருளாதார வளர்ச்சி குறித்த தகவல்களை அடிக்கடி வெளியிடும். கடந்த ஜூன் 21-ம் தேதியின்படி, நம் நாட்டில் வேலைவாய்ப்பின்மை 8.5 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பின்மை 27.1 சதவிகிதமாக உயர்ந்தது.

இரண்டாவது புள்ளிவிவரம், கடந்த ஜூன் மாதத்தில் அரசுக்குச் செலுத்தப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி வரி மிகப்பெரிய அளவில் உயர்ந்திருப்பது. ஊரடங்கு காரணமாக ஜி.எஸ்.டி வரியானது ஏப்ரல் மாதத்தில் ரூ.32,294 கோடியும், மே மாதத்தில் ரூ.62,009 கோடியும் வசூலானது. ஆனால், கடந்த ஒரு மாத காலத்தில் அரசுக்குக் கிடைத்த வரி ரூ.87,422 கோடியாக உயர்ந்திருக்கிறது.

கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் ஓரளவுக்குத் தளர்த்தியிருப்பதால், இயல்புநிலை திரும்பி பொருளாதாரம் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கிவிட்டது என்பதையே இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் இயங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது, நாடு முழுக்க ரயில் போக்குவரத்துச் சேவையைக் கூடிய விரைவில் தொடங்க வேண்டும்.

ஊரடங்கு நடவடிக்கைகளைத் தளர்த்துவதில் மத்திய அரசாங்கத்தைவிட மாநில அரசாங்கம் சுணக்கமாக இருக்கிறது. இ-பாஸ் நடைமுறை லஞ்சத்தை வளர்க்கவும், வளர்ச்சியைத் தடுக்கவும்தான் உதவுகிறதே தவிர, மக்களுக்கு நன்மை செய்வதாக இல்லை. எனவே, இ-பாஸ் முறையைக் கூடிய விரைவில் ஒழித்துவிட்டு மக்கள் சுதந்திரமாக நடமாட, போக்குவரத்து வசதிகளை தமிழக அரசாங்கம் செய்து தர வேண்டும்.

கொரோனாவிடமிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. இந்தப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது மக்களின் கடமை. இந்த உண்மையைப் புரிந்துகொண்டு மக்களும் அரசாங்கமும் சுறுசுறுப்புடன் செயல்பட்டால், நமது பொருளாதாரம் இன்னும் வேகமாக உயரும்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு