Published:Updated:

வாராக்கடனை வங்கிகள் குறைக்காவிட்டால்..?

ஹலோ வாசகர்களே..!

பிரீமியம் ஸ்டோரி
ங்கிகளின் வாராக்கடன் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அச்சுறுத்துவதாக இருக்கிறது. கொரோனா தொற்றுநோய் வந்தபின் வங்கிகளின் வாராக்கடன் எவ்வளவு எனத் துல்லியமாக வெளியிடப்படாமலேயே முடக்கி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அது குறைந்தபட்சம் 8 லட்சம் கோடியைத் தாண்டியிருக்கும் என்கிறார்கள் இந்தத் துறை சார்ந்த நிபுணர்கள்.

இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம், தனியார் வங்கிகளைவிட பொதுத்துறை வங்கிகள் தந்த கடன் அதிகளவில் வாராக்கடனாக மாறுவதும், அந்த வாராக்கடன்கள் ‘தாராளமாக’த் தள்ளுபடி (write 0ff) செய்யப்படுவதும் சகஜமான விஷயமாக மாறி வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் 12 பொதுத் துறை வங்கிகள் தந்த கடனில் ரூ.6.32 லட்சம் கோடியைக் (கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டுமே ரூ.4.95 லட்சம் கோடி) ‘கருணை’யுடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.2.78 லட்சம் கோடிக்கான வாராக்கடன் பெரும் தொழில் நிறுவனங்களால் உருவானதாகும். இத்தனை லட்சம் கோடி வாராக் கடனிலிருந்து ரூ.1.08 லட்சம் கோடியை மட்டுமே வங்கிகள் திரும்பப் பெற்றுள்ளன.

வாராக்கடன் உருவாவது வங்கித் தொழிலில் தவிர்க்க முடியாத அம்சமாகும். நூறு பேருக்குக் கடன் தந்தால், அவர்களில் ஒருவர் கடனை திரும்பத் தராமல் போவதற்கு 100% வாய்ப்புண்டு. ஆனால், இன்றைக்கு வங்கிகளின் வாராக்கடன் அளவு உயர்வதைப் பார்த்தால், சில வங்கி அதிகாரிகளும் சில பெரும் தொழில் நிறுவனங்களும் கூட்டுச் சேர்ந்து ‘கொள்ளை’ அடிக்கிறார்களா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இந்தச் சந்தேகத்துக்கு மிகச்சிறந்த உதாரணம், சமீபத்தில் திவால் நிலைக்குச் சென்று மீண்ட லக்ஷ்மி விலாஸ் வங்கி. இந்த வங்கியானது வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெரும் தொழில் நிறுவனத்துக்கு எந்தச் சொத்தையும் அடமானம் பெறாமல் 1,000 கோடி ரூபாய்க்கு கடன் தந்து, அது வாராக்கடனாக மாறியது. ஆனால், இந்த வாராக்கடனுக்கு யார் காரணம் என்ற கேள்விக்கு பதில் இல்லை. இந்த வங்கியில் மட்டுமல்ல, எல்லா வங்கியிலும் வாராக்கடன் எப்படி உருவானது என்பதற்கான விசாரணை எதுவும் நடந்து, யாரும் தண்டிக்கப்படவில்லை. அப்படி நடந்திருந்தால், வாராக்கடன் உருவாவது இன்று கணிசமாகக் குறைந்திருக்கும்.

எல்லா வங்கி அதிகாரிகளும் தொழில் நிறுவனங்களும் இப்படிச் செய்கின்றன என்று சொல்ல முடியாது என்றாலும், வாராக்கடன் மூலம் பறிபோவது அரசின் பணம், முதலீட்டாளர்கள் பணம், மக்கள் பணம் என்பதை யாரும் மறக்கக்கூடாது.

வாராக்கடன் உருவாவதைக் குறைப்பது, வாராக்கடன் பணத்தை மீட்டெடுப்பதற்கான வழிகளைக் கண்டறியும் நடவடிக்கைகளை ஆர்.பி.ஐ-யும் மத்திய அரசும் சேர்ந்து எடுக்காவிட்டால், வங்கிகளின் எதிர்காலம் கவலைக் குரியதாக மாறிவிடும் என்பதைச் சொல்லவே தேவையில்லை.

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு