Published:Updated:

உரியவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

உரியவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்!

ஹலோ வாசகர்களே..!

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்
கொரோனா பாதிப்பு காரணமாக வேலையிழப்பு, சம்பளக் குறைப்பு மற்றும் தொழில் பாதிப்பு எனப் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிக்கின்றனர் மக்கள். இதன் காரணமாக மார்ச் மாதம் தொடங்கி ஆகஸ்ட் வரையிலான 6 மாத காலத்துக்குக் கடன் தவணை சலுகைக் காலத்தை (மொரட்டோரியம்) இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதேசமயம், இந்தக் காலகட்டத்துக்கு வட்டி மட்டுமல்லாது, வட்டிக்கு வட்டியையும் வங்கிகள் அறிவித்தன. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவே, வட்டிக்கு வட்டி போடுவது மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

‘இதன் காரணமாக வங்கிகளுக்கு சுமார் 15,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். வட்டி மொத்தத்தையும் தள்ளுபடி செய்தால் 6 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இது வங்கித் துறையைப் பெரிதும் பாதிக்கும்’ என்பதுதான் ரிசர்வ் வங்கியின் வாதம்.

இந்தநிலையில், கடந்த புதன்கிழமை இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘மொரட்டோரியத்தை மேலும் நீட்டிக்கும் சாத்தியம் இல்லை. கடன் வாங்கி இருப்பவர்களிடமிருந்து வட்டி வாங்கித்தான் டெபாசிட்தாரர்களுக்கு வட்டி கொடுக்க வேண்டியிருக்கிறது’ என்று அழுத்தமாக ரிசர்வ் வங்கித் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது இப்படியிருக்க, கடன் வாங்கியவர்களில் சுமார் 40% பேர், நவம்பர் மாதத்துக்கான தவணை, வட்டி என எதையும் செலுத்தவில்லை என்ற புள்ளிவிவரம் தற்போது வெளியாகியிருக்கிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் 32% என்று இருந்தது, தற்போது 8% உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா காரணமாக ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் இன்னும் சீராகவில்லை... மேலும் மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. ஆம், கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு நாடு திரும்பிவிட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறதே தவிர, பெரும்பாலான துறைகளில் நிலைமை இன்னும் சீராகவில்லை. அதேசமயம், பொருளாதாரம் சீராகும் வரை மொரட்டோரியத்தை நீட்டிப்பது என்பது வங்கித்துறையை மேலும் சிக்கலில் தள்ளும் என்பதில் மாற்றுக் கருத்தும் இல்லை.

என்றபோதும், ‘மிகமிக அவசியத் தேவையுள்ளவர்களுக்கு மட்டும் மேலும் சில மாதங்களுக்குக் கடன் சலுகையை நீட்டிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து அவர்களைக் கைதூக்கிவிட வேண்டும்’ என்பதே பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இதிலிருக்கும் நியாயத்தை உணர்ந்து, 100 சதவிகிதம் அவசியத் தேவையுள்ளவர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு உரியவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் முன் வர வேண்டும்.

- ஆசிரியர்