Published:Updated:

கடன் இல்லா வாழ்க்கையை வாழ்வோம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

நம் நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கல்வி, மருத்துவ வசதி, சாலை வசதி என மக்களின் முன்னேற்றத்துக்குத் தேவையான எதுவுமே 100 சதவிகித வளர்ச்சியைக் காணவில்லை. ஆனால், நம் நாட்டின் முன்னேற்றத்தையே பின்னோக்கி இழுக்கும் கடன் மட்டும் 100 சதவிகிதத்துக்குமேல் வளர்ச்சி கண்டிருப்பதை நாம் அக்கறையுடன் கவனித்தாக வேண்டும்.

தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் கடன் தொடர்பான தரவுகளை ஆராய்ந்து, தரச்சான்று வழங்கும் நிறுவனமான சி.ஆர்.எஃப்.ஐ ஹைமார்க், நம் நாட்டில் தனிநபர்கள் வாங்கிய கடன் குறித்த அறிக்கையில், 2018-ல் ரூ.2.85 லட்சம் கோடியாக இருந்த தனிநபர் கடன், 2020 ஆகஸ்ட்டில் ரூ.5.07 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதைச் சொல்லி, நம்மை அதிர வைத்துள்ளது.

வளர்ந்துவரும் பொருளாதாரத்தின் நல்லதோர் அறிகுறியாகக் கடன் வளர்ச்சியானது பார்க்கப்படுகிறது. ‘கடன் நல்லது, அது இல்லாவிட்டால், பொருள்களின் விற்பனை மந்தமாகிவிடும்’ என்று வாதிடுபவர்களும் உண்டு. இதில் ஓரளவுக்கு உண்மை இருந்தாலும், இரண்டு ஆண்டுகளில் நூறு சதவிகிதம் அளவுக்கு கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது எந்த வகையிலும் சரியான வளர்ச்சி என்று வாதிட முடியாது.

காரணம், கடன் வாங்கும்போது அசலுடன் வட்டியையும் கட்ட வேண்டி யிருக்கிறது. இந்த வட்டியைத் தனியார் வங்கிகள் அதிகமாக வசூலிக்கின்றன. சம்பாதிப்பதில் பெரும் பணம் வட்டி கட்டவே போய்விடும்போது, சேமிப்பு மிகவும் குறைந்தோ, இல்லாமலோ போய்விடுகிறது. இப்படி ஓரிரு குடும்பங்கள் மட்டும் இருந்தால், அதற்காகக் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், பல லட்சம் பேர் இந்தக் கடன் வலையில் சிக்கியிருப்பதும், கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதும் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகளே அல்ல.

இந்த அவல நிலையைச் சரிசெய்ய என்னதான் வழி? கடன் வழங்கத் தயாராக இருக்கும் நிறுவனங்களைக் குறை சொல்வதை விட்டுவிட்டு, மக்கள் அனைவருக்கும் நிதிக் கல்வி அளிப்பதன் மூலமே கடன் சிக்கலில் அவர்கள் மாட்டாமல் தப்ப வைக்க முடியும். இதற்கு, மாணவர்கள் பள்ளியில் படிக்கும்போதே சேமிப்பால் விளையும் நன்மைகளையும் கடனால் ஏற்படும் பாதகங்களையும் எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.

ஒருவர் எந்த நிலையில் கடன் வாங்க வேண்டும், கடனாக வாங்கிய பணத்தை எப்படிச் செலவழிக்க வேண்டும், எப்படிக் கண்ணும் கருத்துமாகக் கணக்குப் போட்டுத் திரும்பக் கட்ட வேண்டும் என்பது பற்றியெல்லாம் எடுத்துச் சொல்லி புரியவைத்தால், கடந்த இரு ஆண்டுகளில் ஏற்பட்ட கடன் வளர்ச்சி இனிவரும் ஆண்டுகளில் மீண்டும் ஏற்படாமல் நம்மால் தடுக்க முடியும். கடனை ஒழித்துக் கட்டி, நிம்மதியான, நிறைவான வாழ்க்கையை வாழும் கலையை நம் மக்கள் ஒவ்வொருவருக்கும் சொல்லித் தர வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்!

- ஆசிரியர்