Published:Updated:

மனிதர்களை எந்திரமாக நினைக்கும் மத்திய அரசு!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

ரசாங்கத்தின் முக்கியமான பொறுப்புகளில் ஒன்று, அது எடுக்கும் எந்த நடவடிக்கையும் மனித சமூகத்தை முன்னேற்றிக்கொண்டு செல்வதாக இருக்க வேண்டும். ஆனால், கடந்த 19-ம் தேதி அன்று, தொழிலாளர்களின் வேலை நேரம் தொடர்பாக மத்திய அரசாங்கம் முன்வைத்திருக்கும் சில வரைவு விதிகள் நம்மைப் பின்னோக்கி இழுத்துக்கொண்டு செல்வதாகவே உள்ளன.

தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தம் என்கிற பெயரில் முன்மொழியப்பட்டுள்ள இந்த வரைவு விதிகள், இனி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வைக்க வழிவகை செய்கிறது என்பது எல்லாத் தொழிலாளர்களையும் நோக வைக்கும் செய்தி ஆகும்.

100 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளர்கள் 12 முதல் 16 மணி நேரம் வரை வேலை பார்த்து, அதை எதிர்த்துப் போராடியதன் விளைவாக எட்டு மணி நேரம் வேலை நடைமுறைக்கு வந்தது. ஆனால், கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்டு, பொருளாதாரம் சரிந்திருக்கும் நிலையில் தொழிலாளர்கள் தங்கள் வேலையைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரம் உழைக்கத் தயங்கவில்லை. இன்று பல தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் 10 மணி நேரத்துக்குமேல் வேலை செய்வது சர்வசாதாரணமாகிவிட்டது. இப்போது மத்திய அரசே 12 மணி நேரத்துக்கு வேலை செய்ய வேண்டும் என்று சொன்னால், தொழிலாளர்கள் இதைவிடக் கூடுதலான நேரத்துக்கு வேலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாவார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இன்றைய தேதியில் ஒருவர் பணியிடத்துக்கு வந்து வீட்டுக்குத் திரும்பவே இரண்டு மணி நேரம் செலவிட வேண்டியிருக்கிறது. இதற்குமேல் 12 மணி நேர வேலை எனில், எப்போது தூங்கி ஓய்வெடுப்பது, குடும்ப வேலைகளைச் செய்வது என்கிற கேள்வி எழுவது நியாயமே! இவ்வளவு நேரம் உழைப்பதற்குத் தனியாகக் கூடுதல் சம்பளம் எதுவும் தரப்படுவதில்லை என்பதையும் கவனித்தாக வேண்டும்.

அதிக நேரம் உழைத்தால் அதிகளவில் பொருளாதார வளர்ச்சி கண்டுவிட முடியாது என்பதற்கு தென் ஆப்பிரிக்கா மிகச் சிறந்த உதாரணம். ஒரு வாரத்துக்கு 45 மணி நேரம் உழைத்தால் போதும். இதிலேயே அந்த நாடு இன்று மிகச் சிறந்த வளர்ச்சியைக் கண்டுகொண்டுதான் இருக்கிறது. ஆனால், நம் நாட்டிலோ ஆறு நாள்களுக்கும் சேர்த்து 60 மணி நேரம் உழைத்தாலும் முன்னேற்றம் வரவில்லை என்றால், தவறு தொழிலாளர்களின் உழைப்பில் இல்லை என்பது தெளிவாகிறது.

ஆர்ட்டிஃபீஷியல் இன்டெலிஜன்ஸ், மெஷின் லேர்னிங் போன்ற நவீன தொழில் நுட்பங்களால் பணியாளர்கள் வேலைவாய்ப்பு குறைய வாய்ப்புள்ள நிலையில், தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிப்பது சரியான முடிவல்ல. அது தொழிலாளர்களைக் களைப்படையச் செய்துவிடும். எனவே, எட்டு மணி நேர வேலை நடைமுறையே தொடர்ந்து நீடிக்க வேண்டும். வேலை நேரத்தை நீட்டிப்பதால் மட்டுமே அரசு அடைய நினைக்கும் முன்னேற்றத்தை அடைய முடியாது என்பதே நிஜம்!

- ஆசிரியர்