Published:Updated:

நம்பிக்கையுடன் புத்தாண்டை வரவேற்போம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

ன்றைக்கு உலகில் வாழ்பவர்களில் பெரும்பாலானவர்கள், தங்கள் வாழ்நாளில் அனுபவித்திராத பல கஷ்டங்களை எல்லாம் அனுபவித்த ஆண்டு என்றால், அது இந்த 2020-ம் ஆண்டுதான். திடீரென வந்த ஊரடங்கு நடவடிக்கை காரணமாக, மக்கள் வீட்டில் முடங்கினார்கள். இதனால் விற்பனை கடுமையாகப் பாதிப்படைந்தது. பல லட்சம் பேர் வேலை இழந்தனர். பெரும்பாலானவர்களின் சம்பளம் குறைந்தது. தொழில்கள் நசிந்து, நிறுவனங்கள் மூடப்பட்டன. 6 சதவிகிதத்துக்குமேல் ஜி.டி.பி வளர்ச்சி கண்டுவந்த நம் இந்தியப் பொருளாதாரம், மைனஸ் 23% என்கிற அளவுக்கு கீழே சென்றது.

இத்தனை கொடூரங்கள் ஒருபக்கம் நிகழ்ந்தாலும், நம் மக்கள் துவண்டுவிடாமல், நம்பிக்கையுடன் போராடினார்கள் என்பதே நிஜம். அலுவலகத்துக்குச் சென்று பணி செய்தே பழக்கப்பட்ட பணியாளர்கள், வீடுகளில் இருந்து கஷ்டப்பட்டு வேலை பார்த்தனர். பள்ளி, கல்லூரிகளில் மட்டுமே படித்த மாணவர்கள் ஆன்லைன்மூலம் கல்வி கற்கப் பழகிக்கொண்டனர். வீடுகளில் முடங்கிக் கிடந்த மக்கள், மீண்டும் உற்சாகமாக வெளியே வந்து தொழிற்சாலைகளில் கடினமாக உழைத்ததன் காரணமாகத்தான், மைனஸ் 23% என்கிற அளவுக்குச் சரிந்திருந்த நம் பொருளாதாரம், தற்போது உயர ஆரம்பித்துள்ளது. மைனஸ் 7.8% என்கிற அளவுக்கு வந்திருப்பது பெரும் நம்பிக்கையைத் தருவதாக இருக்கிறது. ஆனால், இந்த வளர்ச்சி வேகம் நமக்கு நிச்சயம் போதாது.

உலக அளவில் இதுநாள் வரை நமக்கு கிடைக்காமல் இருந்த தொழில் வாய்ப்புகளை கோவிட் நமக்கு பெற்றுத் தந்திருக்கிறது. இந்தியாவிலிருக்கும் 130 கோடிக்கும் மேலான மக்களில் கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், 1 சதவிகிதத்துக்கும் கீழானவர்கள்தாம். ஆகக்கூடி, ஒட்டுமொத்த இந்தியாவுமே ஆரோக்கிய இந்தியாவாகவே இருந்துவருகிறது. இதனால் கிடைத்த தெம்புதான் அடுத்தடுத்தகட்ட பாய்ச்சல்களுக்கு நம்மவர்களை எப்போதுமே தயாராக வைத்திருக்கிறது. கொரோனா சூழலிலும்கூட வேளாண்துறை கொஞ்சம்கூட பாதிப்படையவில்லை என்பதால், விவசாய விளைபொருள்கள் உலகம் முழுக்க ஏற்றுமதி செய்யும் அரிய வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. ‘ஐ.டி வேலைதான் வேண்டும்’ என்றே காத்திருந்த இளைஞர்களில் பலரும் இன்று, கிடைத்த வேலையைக் கண்ணும் கருத்துமாக செய்யத் துணிந்திருப்பது, உற்பத்தித் துறையில் நாம் அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தயாராகிவிட்டோம் என்பதையே காட்டுகிறது. ‘வீட்டுவேலை செய்தால் மட்டுமே போதும்’ என்று ஒதுக்கப்பட்டிருந்த, ஒதுங்கிக் கிடந்த பெண்களில் பலரும்கூட, ‘நாங்களும் வேலை பார்த்து குடும்பத்தை முன்னேற்றுவோம்’ என்று செயல்படத் தொடங்கியிருப்பது, நம் பொருளாதாரம் இன்னும் வேகமாக வளரப்போகிறது என்பதற்கான அறிகுறிகள்தான்.

‘மாறுகிற மனிதர்களே பிழைத்து நிற்கிறார்கள்’ என்பது வரலாறு நமக்கு கற்றுத் தரும் பாடம். மாற்றத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த நாம், உலக நியதிகள் தொடர்பான நமது அணுகுமுறைகள் அனைத்தையும் மாற்றிக்கொண்டு செயல்படுவோம்; எதிர்வரும் 2021 புத்தாண்டை நம்பிக்கையுடன் வரவேற்போம்!

- ஆசிரியர்