Published:Updated:

மீண்டும் வளர்ச்சிக்குத் திரும்பும் பொருளாதாரம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

மீண்டும் வளர்ச்சிக்குத் திரும்பும் பொருளாதாரம்!

ஹலோ வாசகர்களே..!

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்
டந்த மூன்று மாதங்களாக, கொரோனா ஊரடங்கு காரணமாக கெட்ட செய்திகளையே கேட்டுவந்த நாம், இந்த மாதத்திலிருந்து சில நல்ல செய்திகளைக் கேட்கத் தொடங்கியிருக்கிறோம்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மாதங்களில் மிக மிகக் குறைவாக விற்பனையான கார்களின் எண்ணிக்கை, கடந்த ஜூன் மாதத்தில் குறிப்பிடத் தகுந்த அளவு உயர்ந்திருக்கிறது. கடந்த மே மாதத்தில் விற்பனையான கார்களின் எண்ணிக்கையைவிட இரு மடங்கு கார்கள் விற்பனையாகியுள்ளன. இரு சக்கர வாகனங்களின் விற்பனை கடந்த இரு மாதங்களைவிட மிகக் கணிசமாக உயர்ந்துள்ளது. இதேபோல, கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் செலுத்தப்பட வேண்டிய ஜி.எஸ்.டி வரி ஜூன் மாதத்தில் ரூ.90,917 கோடிக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரலில் ரூ.32,294 கோடியும் மே மாதத்தில் ரூ.62,009 கோடியும் ஜி.எஸ்.டி வரி வசூலான நிலையில், தற்போது ரூ.90,000 கோடிக்குமேல் வசூலாகியிருப்பது குறிப்பிடப்பட வேண்டிய வளர்ச்சியே.

உற்பத்தித்துறையில் முன்னேற்றத்தைக் குறிக்கும் பி.எம்.ஐ இண்டெக்ஸ் கடந்த ஜூன் மாதத்தில் 47.2 என்ற அளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது. இது 50 என்கிற அளவுக்குமேல் இருந்தால்தான், `பொருளாதாரம் வளர்ச்சி காணத் தொடங்கிவிட்டது’ எனலாம். என்றாலும், கடந்த ஏப்ரலில் நம் பி.எம்.ஐ இண்டெக்ஸ் 27.4-ஆகவும், மே மாதத்தில் 30.8-ஆகவும் இருந்ததிலிருந்து 47.2 அளவுக்கு உயர்ந்திருப்பது மிகப்பெரிய வளர்ச்சிதான்.

இந்த வளர்ச்சியின் வேகத்தைக் குறையவிடாமல், இன்னும் அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசாங்கங்கள் எடுக்க வேண்டும். தொழில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், அவை செயல்படும் கால அளவையும் அதிகரிக்க வேண்டும். மூலப்பொருள்கள் எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கொரோனாவுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள தொழில் மாற்றங்களைப் புரிந்துகொண்டு, புதிய தொழில் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் முனைப்புடன் செயல்பட்டு, முன்னேற்றம் காண வேண்டியது தொழில் நிறுவனங்களின் கடமை.

எல்லாவற்றுக்கும் மேலாக, `இந்தப் பொருளாதார வளர்ச்சியில் பங்கெடுத்து, பயன்பெற நாம் என்ன செய்ய வேண்டும்...’ என்று சிந்தித்துச் செயல்பட வேண்டியது சாதாரண குடிமகனின் கடமை. `சீனப் பொருள்கள் இனி வேண்டாம்’ என்ற சிந்தனை நமக்குள் கிளம்பியிருக்கும் இந்த நேரத்தில், பல ஆயிரம் புதிய தொழில் வாய்ப்புகளும் நமக்குக் கிடைத்துள்ளன. இந்த வாய்ப்புகளை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், அடுத்துவரும் மாதங்களில் நம் பொருளாதாரம் இன்னும் மிகப்பெரிய அளவில் உயரும் என்பதில் சந்தேகமே இல்லை!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism