Published:Updated:

ஆயிரம் மோர்பிகள் உருவாகட்டும்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

குஜராத்தின் மிகச்சிறிய நகரம் மோர்பி. இந்த நகரத்திலிருந்துதான் இந்தியா முழுமைக்கும் தேவைப்படும் சுவர்க் கடிகாரங்களும் அலாரங்களும் உற்பத்தியாகின்றன.

கடந்த 50 வருடங்களாகத் தொழில் வளர்ச்சியில் பங்குகொண்ட இந்த நகரம், கடிகாரம் தயாரிப்பதில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றது கடந்த காலம். இன்றைக்கு பொம்மைகள் தயாரிப்பில் இறங்கி, இந்தத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் சீனாவுக்குச் சவால்விடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

பொதுவாக, சீனத் தயாரிப்புகளென்றால் விலை குறைவாக இருக்கும். ஆனால், தரமும் குறைவாகத்தான் இருக்கும். மோர்பியில் தயாரிக்கப்படும் பொம்மைகளோ விலை குறைவாகவும், அதிக தரத்துடனும் இருப்பதால், உலக அளவில் பிரபலமாக விளங்கும் பொம்மைத் தயாரிப்பு நிறுவனங்களான மட்டேல்ஸ், லெகோஸ், ஹம்லா போன்ற நிறுவனங்கள் மோர்பியிலுள்ள நிறுவனங்களிடம் பொம்மைகளைத் தயாரித்துத் தர ஆர்டர் தந்திருக்கின்றன. பொம்மைகள் தவிர, ஹிட்டாச்சி, சாம்சங், எல்.ஜி போன்ற நிறுவனங்களுக்கு எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களைத் தயாரித்து அளிக்கவும் தொடங்கியிருக்கிறது மோர்பி நகரம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

குஜராத்தின் மோர்பியுடன் ஒப்பிடும்போது, நம் திருப்பூரும் சிவகாசியும் சற்றும் சளைத்தவையல்ல. ஆனால், ஒரு திருப்பூர், ஒரு கரூர், ஒரு சிவகாசியுடன் நின்றுவிட்டதுதான் நம் தவறு. இன்றைக்கு நம் இளைஞர்கள் மெத்தப் படித்தவர்களாக இருக்கிறார்கள். அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் நம்மவர்களை விஞ்ச ஆளில்லை. ஆனால் நாமோ, `நம் இளைஞர்கள் படித்துவிட்டு, ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து சம்பாதித்தால் போதும்’ என்று நினைக்கிறோமே தவிர, `சுயமாக ஒரு தொழிலைச் செய்ய வேண்டும்’ என்று நினைப்பதில்லை. இதனால் உலக நிறுவனங்களுக்கு நாம் உழைத்துக் கொட்டுகிறவர்களாக இருக்கிறோம். இந்த நிலை மாற்றமின்றி தொடர்வதால்தான், மத்திய தர வர்க்கத்தினர் தொடர்ந்து அதிகரிக்கின்றனர். நம் நாடு இன்னும் அதிகமான தொழில் வளர்ச்சி காண வேண்டுமெனில், நம் இளைஞர்கள் சொந்தமாகத் தொழிலில் ஈடுபட முழுமனதுடன் நாம் ஊக்குவிக்க வேண்டும்.

நேற்று வரை சீன ஆப்ஸ்களையே நம்மில் பலர் பயன்படுத்திவந்தோம். இப்போது அவை இல்லை என்றவுடன், இந்திய ஆப்ஸ்களைப் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது. பிற துறைகளிலும், `சீனத் தயாரிப்புகளைப் புறக்கணிப்போம்’ என்று பேசிக்கொண்டிருக்காமல், உலக நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு நாம் முன்னேற வேண்டும். நம்மிடம் அது இல்லை, இது இல்லை என்று பேசிப் பொழுதுபோக்குவதைவிட நம்மால் செய்ய முடிந்த காரியங்களைக் குறையில்லாமல் செய்தால், இந்தியா முழுக்க பல ஆயிரம் மோர்பிகளை உருவாக்க முடியும்!

- ஆசிரியர்