பிரீமியம் ஸ்டோரி
இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,000-ஐ தாண்டும் நிலை... வேலை இழப்பு, சூன்யமாகத் தெரியும் எதிர்காலம்... இவற்றோடு மேலும் மேலும் நம்மை வதைக்கக் கிளம்பும் பிரச்னைகள்...

அவற்றில் ஒன்று, தினமும் உயர்த்தப்படும் பெட்ரோல், டீசல் விலை. இவற்றின் விலையேற்றம் அத்தியாவசியப் பொருள்களின் விலையுயர்வுக்குக் காரணமாகிவிடும் என்பதுதான் நமக்குக் கவலையளிக்கும் விஷயமாக இருக்கிறது. கடந்த 7-ம் தேதி முதல் தொடர்ந்து 19 நாள்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுவருகிறது. கடந்த 19 நாள்களில் (வியாழக்கிழமை மாலை வரை) லிட்டருக்கு மொத்தம் 8.66 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 72 ரூபாய்க்கு விற்கப்பட்டுவந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.80-க்கு அருகிலும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.80-ஐ தாண்டியும் விற்கப்படும் நிலை உருவாகியிருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயரப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. டி.பி.பி (Trade parity price) என்ற முறையின் மூலம் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுவது, டாலர்-ரூபாய் இடையிலான மதிப்பு வித்தியாசம், சுத்திகரிப்புச் செலவினங்கள், டீலருக்குத் தரப்படும் கமிஷன், ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கான லாபம், எல்லாவற்றுக்கும் மேலாக மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் ஆகியவையெல்லாம் அடங்கும். ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயின் விலை அதிகமாக இருப்பதால், அந்த விலைக்கே இப்போது எரிபொருளை விற்றாக வேண்டிய கட்டாயம் ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு. இவை எல்லாவற்றையும்விட, அரசின் கஜானா காலியாக இருப்பதால், மானியம் எதையும் தர மத்திய அரசு தயாரில்லை. எனவே, `பெட்ரோல் விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை’ என்ற நிலையில் இருக்கிறது மத்திய அரசு.

இந்த நேரத்தில் மத்திய அரசாங்கம் ஒரு விஷயத்தை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். கொரோனாநோய்த் தொற்று காரணமாக பொருளாதாரமே முடங்கிக்கிடக்கிறது. பலருக்கும் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. பலர் வேலையை இழக்கவும் செய்துள்ளனர். சிறு தொழில் செய்பவர்களுக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும் குறைந்தபட்ச வருமானம் கிடைப்பதுகூட கடினமான செயலாக இருக்கிறது. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டால், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்து, பணவீக்கத்தையே அதிகரிக்கச் செய்யும். ஏற்கெனவே வருமானம் குறைந்தநிலையில் இருக்கும் மக்கள், விலைவாசி உயர்வை எப்படித் தாங்கிக்கொள்வார்கள்? மக்கள்நலனை மனதில் கொண்டாவது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதை மத்திய அரசாங்கம் நிறுத்திவைக்க வேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோள்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு